‘போராட்டத்தை தொடர்ந்தால் எஸ்மா சட்டம் பாயும்’ - போக்குவரத்து ஊழியர்களுக்கு கர்நாடக அரசு எச்சரிக்கை


‘போராட்டத்தை தொடர்ந்தால் எஸ்மா சட்டம் பாயும்’ - போக்குவரத்து ஊழியர்களுக்கு கர்நாடக அரசு எச்சரிக்கை
x
தினத்தந்தி 8 April 2021 9:49 PM GMT (Updated: 8 April 2021 9:49 PM GMT)

கர்நாடகத்தில் 2-வது நாளாக அரசு பஸ்களின் போக்குவரத்து சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதற்கிடையே போராட்டத்தை தொடர்ந்தால் போக்குவரத்து ஊழியர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாயும் என கர்நாடக அரசு எச்சரித்துள்ளது.

பெங்களூரு:

பஸ்கள் இயக்கப்பட்டன

  6-வது ஊதிய குழு பரிந்துரையின்படி தங்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று கோரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். முதல் நாளில் தலைநகர் பெங்களூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடாததால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். முதல் நாளில் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடாததால் போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.17 கோடி இழப்பு ஏற்பட்டது.

  இந்த நிலையில் 2-வது நாளாக நேற்றும் அரசு பஸ்களின் போக்குவரத்து சேவை முடங்கியது. இதனால் பயணிகள் பரிதவிப்புக்கு ஆளாயினர். போக்குவரத்து ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடர்ந்ததால், குறைந்த எண்ணிக்கையில் போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு வந்தனர். அவர்களை வைத்து ஒரு சில அரசு பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன. தனியார் டிரைவர்கள், ஓய்வு பெற்ற டிரைவர்களை தற்காலிகமாக நியமித்து பஸ்களை இயக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

சுமுக தீர்வு எட்ட முடியும்

  பெங்களூரு மாநகரில் மட்டும் சுமார் 50 பஸ்கள் இயக்கப்பட்டன. மாநிலத்தின் பிற பகுதிகளில் 250 அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படாமல் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. தனியார் பஸ்கள் அதிக எண்ணிக்கையில் ஓடின. ஆனால் அந்த தனியார் பஸ்களில் 2, 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால் அந்த பஸ்களில் பயணம் செய்ய பயணிகள் தயக்கம் காட்டுகிறார்கள்.

  6-வது ஊதிய குழு பரிந்துரைப்படி தங்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று போக்குவரத்து ஊழியர்கள் கேட்கிறார்கள். ஆனால் அரசோ 8 சதவீத சம்பள உயர்வு மட்டுமே வழங்க முடியும் என்று சொல்கிறது. இருதரப்பினரும் தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால், வேலை நிறுத்தம் முடிவுக்கு வராமல் உள்ளது. மேலும் போக்குவரத்து ஊழியர்களை அழைத்து பேச அரசு ஆர்வம் காட்டவில்லை. இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே இந்த பிரச்சினைக்கு சுமுக தீர்வு எட்ட முடியும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கருத்து ெதரிவித்து உள்ளனர். ஆனால் அரசோ, போக்குவரத்து ஊழியர்களை இன்னும் பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் உள்ளது. இதனால் இந்த வேலை நிறுத்தம் முடிவுக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சட்டப்படி நடவடிக்கை

  அதற்கு பதிலாக மாற்று ஏற்பாடுகள் மூலம் பஸ்களை இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. மேலும் போக்குவரத்து கழகங்களின் அதிகாரிகள், ஊழியர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நாளை (அதாவது இன்று) பணிக்கு ஆஜராக வேண்டும் என்றும், இல்லாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் ஊழியர்களில் ஒரு பகுதியினர் ஆதங்கம் அடைந்துள்ளனர்.

  மாநிலம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு சொந்தமான குடியிருப்புகளில் வசிக்கும் ஊழியர்களை உடனே வெளியேறும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால் அந்த ஊழியர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர். தங்களை வெளியேற சொன்னால் எங்கே செல்வோம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அரசு வழங்கும் குறைந்த சம்பளத்தை கொண்டு குடும்பத்தை நடத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் அவர்கள் தங்களின் வேதனையை வெளிப்படுத்தினா்.

கொரோனா பரவல்

  பெங்களூருவில் பெரும்பாலான பஸ்கள் ஓடாததால் பொதுமக்கள் ஆட்டோ, வாடகை கார்களில் அதிக கட்டணம் கொடுத்து பயணித்தனர். பொதுமக்கள் மெட்ரோ ரெயில்களை அதிகமாக பயன்படுத்தினர். பஸ்கள் ஓடாததால் வேலைக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மருத்துவமனைகளுக்கு செல்கிறவர்கள் அவதிப்பட்டனர். பலர் மெஜஸ்டிக் பஸ் நிலையத்திற்கு வந்து பஸ் இல்லாததை கண்டு ஏமாற்றம் அடைந்தனர்.

  பெங்களூரு மெஜஸ்டிக் பி.எம்.டி.சி. பஸ் நிலையத்தில் இருந்து தனியார் பஸ்கள் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டன. ஆட்டோக்களும் பஸ் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டன. இதற்கிடையே தனியார் பஸ் உரிமையாளர்கள், பெங்களூருவில் தனியார் பஸ்களை இயக்க நிரந்தரமாக உரிமம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

8 சதவீத சம்பள உயர்வு

  இதற்கிடையே முதல்-மந்திரி எடியூரப்பா உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், "போக்குவரத்து ஊழியர்கள் முன்வைத்த 10 கோரிக்கைகளில் 8 கோரிக்கைளை நிறைவேற்றியுள்ளோம். சம்பள உயர்வு 8 சதவீதம் வழங்க முடிவு செய்துள்ளோம். 6-வது ஊதிய குழு பரிந்துரைப்படி சம்பள உயர்வு வழங்க முடியாத நிலை உள்ளது.

  கொரோனா பரவல் காரணமாக போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற காரணத்தினால், தனியார் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அனைத்து தனியார் பஸ்களுக்கும் அனுமதி வழங்கியுள்ளோம்" என்றார்.

சாத்தியமே இல்லை

  கர்நாடக துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

  சம்பள உயர்வு கோரி போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே நிதி இல்லை. இந்த நிலையில் 35 சதவீத சம்பள உயர்வு வழங்குமாறு கேட்பது நியாயமா? இவ்வளவு சம்பள உயர்வு வழங்க நிதி எங்கிருந்து கிடைக்கும்.

  35 சதவீத சம்பள உயர்வு வழங்கினால் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.1,000 கோடி தேவைப்படுகிறது. இதனால் ஊழியர்கள் கேட்பது போல் 6-வது ஊதிய குழு பரிந்துரைப்படி சம்பள உயர்வு வழங்க சாத்தியமே இல்லை. அரசு 8 சதவீத சம்பள உயர்வு வழங்க தயாராக உள்ளது. தற்போது உள்ள நெருக்கடி நிலையை ஊழியர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

எஸ்மா சட்டம் பாயும்

  பேச்சுவார்த்தைக்கு வருமாறு முதல்-மந்திரி எடியூரப்பா அழைப்பு விடுத்துள்ளார். முதலில் வேலை நிறுத்தத்தை கைவிட்டு அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். நாங்கள் இன்னும் 2 நாட்கள் பொறுமை காப்போம். ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை கைவிடாவிட்டால், எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

  பயிற்சியில் உள்ள ஊழியர்கள் சட்டப்படி போராட்டம் நடத்த முடியாது. ஆனால் அவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பியுள்ளோம்.

ஆட்சிக்கு வரமாட்டோம்

  தனியார் பஸ்கள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன. அனைத்து பஸ்களையும் இயக்க மாற்று வழிமுறைகளை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். தான் முதல்-மந்திரி ஆனால் 6-வது ஊதிய குழு பரிந்துரைப்படி சம்பள உயர்வு வழங்குவதாக குமாரசாமி கூறியுள்ளார். அவரது கட்சி கரைந்து கொண்டிருக்கிறது.

  ஆட்சிக்கு வரமாட்டோம் என்பதால் அவர் இவ்வாறு பேசுகிறார். அவர் முதல்-மந்திரியாக இருந்தபோது சம்பள உயர்வு வழங்காதது ஏன்? அனைவரும் உண்மை நிலையை அறிந்து பேச வேண்டும். பா.ஜனதா அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இது சரியல்ல.
  இவ்வாறு லட்சுமண் சவதி கூறினார்.
  
நிருபரின் கேள்வியால் எடியூரப்பா கோபம்

முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் நிருபர் ஒருவர், இன்சூரன்ஸ் புதுப்பிக்கப்படாத தனியார் பஸ்களும் இயங்க அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளதாக சொல்கிறார்கள். ஒருவேளை ஏதாவது விபத்து ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு என்று கேள்வி எழுப்பினார். 

அதற்கு கடும் கோபம் அடைந்த எடியூரப்பா, "அதை பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள். அரசை எப்படி நடத்த வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். இது ஒரு விசேஷ சந்தர்ப்பம் என்பதால் தனியார் பஸ்களுக்கு தற்காலிகமாக அனுமதி வழங்கியுள்ளோம். பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுதை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளோம்" என்றார்.

Next Story