அசுர வேகத்தில் பரவுகிறது; இந்தியாவில் ஒரே நாளில் 1¼ லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு - 10 மாநிலங்களில் வேகம் அதிகரிப்பு


அசுர வேகத்தில் பரவுகிறது; இந்தியாவில் ஒரே நாளில் 1¼ லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு - 10 மாநிலங்களில் வேகம் அதிகரிப்பு
x
தினத்தந்தி 8 April 2021 10:16 PM GMT (Updated: 8 April 2021 10:16 PM GMT)

இந்தியாவில் ஒரே நாளில் 1¼ லட்சம் பேர் கொரோனாவிடம் சிக்கியுள்ளனர். இதன் மூலம் தினசரி பாதிப்பு மீண்டும் புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை மக்களை கடுமையாக அலைக்கழித்து வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான உயிர்களை வாரிச்சுருட்டிச்செல்லும் இந்த வைரஸ் சுனாமி, பல்லாயிரக்கணக்கான மக்களை படுக்கையிலும் ஆழ்த்தி வருகிறது.

நாட்டில் சில ஆயிரங்களாக குறைந்திருந்த தினசரி பாதிப்பு எண்ணிக்கை தற்போது லட்சத்தை கடந்து விட்டது. அதிலும் ஒவ்வொரு நாளும் அசுர வேகத்தில் எகிறி வரும் பாதிப்பால் தினமும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

அந்தவகையில் நேற்றும் 1.26 லட்சத்துக்கு மேற்பட்டோரை தனது கொடூர கரத்தால் வளைத்து புதிய உச்சத்தில் சென்றிருக்கிறது, இந்த பெருந்தொற்று. அந்தவகையில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 789 பேர் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதன் மூலம் நாட்டில் இதுவரை பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 29 லட்சத்து 28 ஆயிரத்து 574 ஆக அதிகரித்து இருக்கிறது. தினமும் லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருவது மத்திய-மாநில அரசுகளை கடும் அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது.

மாநிலங்களின் நிலவரத்தை பொறுத்தவரை மராட்டியம், சத்தீஷ்கார், கர்நாடகா, உத்தரபிரதேசம், டெல்லி, மத்திய பிரதேசம், தமிழ்நாடு, குஜராத், கேரளா மற்றும் பஞ்சாப் ஆகிய 10 ஆகிய மாநிலங்களில் தொற்றின் வேகம் கடுமையாக அதிகரித்து இருக்கிறது.

நேற்றைய மொத்த பாதிப்பில் 84.21 சதவீதம் பேர் இந்த 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இதில் மராட்டியத்தில் மட்டுமே 59 ஆயிரத்து 907 பேர் தொற்றுக்கு சிக்கிய துர்பாக்கியசாலிகளாக மாறியிருக்கிறார்கள்.

இவர்களை தவிர சத்தீஷ்காரில் 10,310, கர்நாடகாவில் 6,976 என பட்டியல் நீள்கிறது.

இதைப்போல மேற்படி 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 685 பேர் கொரோனாவால் மரணத்தை தழுவியிருக்கிறார்கள். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 1 லட்சத்து 66 ஆயிரத்து 862 ஆக அதிகரித்து இருக்கிறது.

மேற்படி 24 மணி நேரத்தில் நிகழ்ந்த கொரோனா மரணங்களில், 87.59 சதவீதம் பேர் 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். அதிலும் மராட்டியர்கள் மட்டுமே 322 பேர் ஒரே நாளில் மரணித்து உள்ளனர்.

அதேநேரம் அசாம், லடாக், நாகலாந்து, திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மேற்படி 24 மணி நேரத்தில் கொரோனா மரணம் எதுவும் நிகழவில்லை.

இந்தியாவில் நாள்தோறும் பதிவாகும் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை கடந்த 29 நாளாக அதிகரித்து வரும் நிலையில், சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று காலை நிலவரப்படி 9 லட்சத்து 10 ஆயிரத்து 319 பேர் சிகிச்சையில் இருந்தனர். இது மொத்த பாதிப்பில் 7.04 சதவீதம் ஆகும்.

சிகிச்சை பெறுவோரில் 74.13 சதவீதம் பேர் மராட்டியம், சத்தீஷ்கார், கர்நாடகா, உத்தரபிரதேசம், கேரளா ஆகிய 5 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இதில் மராட்டியர்கள் மட்டுமே 55.26 சதவீதத்தினர் சிகிச்சையில் உள்ளனர்.

நாட்டில் குணமடைந்தோர் விகிதம் 91.67 ஆக குறைந்துள்ளது. நேற்று காலை வரை 1 கோடியே 18 லட்சத்து 51 ஆயிரத்து 393 பேர் தொற்றில் இருந்து மீண்டிருந்தனர்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதை தொடர்ந்து, தினந்தோறும் நடத்தப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அந்தவகையில் நேற்று முன்தினம் மட்டும் 12 லட்சத்து 37 ஆயிரத்து 781 சளி மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதன் மூலம் இந்தியா இதுவரை மேற்கொண்ட கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 25.26 கோடியாக அதிகரித்து உள்ளது.

இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.

Next Story