ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க கோரும் வழக்கு விரைந்து விசாரிப்பது பற்றி அடுத்த தலைமை நீதிபதி முடிவு செய்வார் - விசாரணை 26-ந் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு


ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க கோரும் வழக்கு விரைந்து விசாரிப்பது பற்றி அடுத்த தலைமை நீதிபதி முடிவு செய்வார் - விசாரணை 26-ந் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு
x
தினத்தந்தி 8 April 2021 11:19 PM GMT (Updated: 8 April 2021 11:19 PM GMT)

ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரி பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தாக்கல் செய்த வழக்கு விசாரணை ஏப்ரல் 26-ந் தேதி நடைபெறும் என்றும், விரைவாக விசாரிப்பது பற்றி அடுத்த தலைமை நீதிபதி முடிவு செய்வார் என்றும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்துக்களின் மத நம்பிக்கை அடையாளமாக கருதப்படும் ராமர் பாலம் என்பது சேது சமுத்திர திட்டத்தால் அழிந்து போகும் என்று பல்வேறு கருத்துகள் எழுந்தன. இதையடுத்து இந்த திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 2009-ம் ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையின்போது, ராமர் பாலத்திற்கு எவ்வித சேதமும் இல்லாமல் சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு விளக்கம் அளித்தது.

இதனிடையே, கடந்த 2015-ம் ஆண்டு ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் ஒரு வழக்கை சுப்பிரமணிய சுவாமி தொடர்ந்தார்.

மேலும், ராமர் பாலத்தை நினைவுச் சின்னமாக அறிவிக்கும் பட்சத்தில் சேது சமுத்திர திட்டத்திற்கு தடை கோரிய தனது வழக்கை திரும்பப்பெற்றுக்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது தொடர்பாக மத்திய அரசு அதன் நிலைப்பாட்டை தெரிவிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் தனது மனுவை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமெனக் கோரி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன் சுப்பிரமணிய சுவாமி கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 23-ந் தேதி கோரிக்கை வைத்தார்.

அப்போது தலைமை நீதிபதி இந்த வழக்கு தொடர்பாக நினைவூட்டல் கோரிக்கையை வைக்கும்படியும், வழக்கை மூன்று மாதங்கள் கழித்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் சுப்பிரமணிய சுவாமியிடம் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து, கொரோனா தொற்று பரவ தொடங்கியதால், அவசர வழக்குகளை மட்டும் காணொலி வாயிலாக சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க தொடங்கியது.

இந்த நிலையில், சுப்பிரமணிய சுவாமி, தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே முன்பு நேற்று ஆஜராகி, ராமர் பாலத்தை தேசிய புராதான சின்னமாக அறிவிக்கக்கோரிய வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு முறையிட்டார்.

அதற்கு தலைமை நீதிபதி, இந்த மனுவை விசாரிக்க சில காலம் தேவைப்படும், ஆனால் தற்போது போதிய நேரமில்லை, எனவே இந்த மனு விசாரணை தொடர்பாக அடுத்த தலைமை நீதிபதி முடிவு செய்வார் என தெரிவித்ததுடன், வழக்கு விசாரணையை 26-ந் தேதிக்கு பட்டியலிடவும் உத்தரவிட்டார்.

Next Story