கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: மத்தியபிரதேசத்தில் 60 மணி நேர முழு ஊரடங்கு - இன்று மாலை 6 மணி முதல் அமல்


கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: மத்தியபிரதேசத்தில் 60 மணி நேர முழு ஊரடங்கு - இன்று மாலை 6 மணி முதல் அமல்
x
தினத்தந்தி 8 April 2021 11:52 PM GMT (Updated: 8 April 2021 11:52 PM GMT)

கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்தியபிரதேசத்தில் 60 மணி நேர முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து நகரங்களிலும் இன்று மாலை 6 மணிக்கு இது அமலுக்கு வருகிறது.

போபால், 

மத்தியபிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. அதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த போபால், இந்தூர், ஜபல்பூர், குவாலியர் போன்ற முக்கிய நகரங்களில் கடந்த 3 வாரங்களாக ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதற்கிடையே, மத்தியபிரதேசத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்து 43 ஆக அதிகரித்தது. 13 பேர் உயிரிழந்தனர்.

இந்தநிலையில், முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் நேற்று கொரோனா தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டம் முடிவடைந்த பிறகு சிவராஜ்சிங் சவுகான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கொரோனாவை கட்டுப்படுத்த மத்தியபிரதேசத்தில் உள்ள அனைத்து நகரங்களிலும் 60 மணி நேர முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு, 9-ந்தேதி (இன்று) மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. 12-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 6 மணிவரை அமலில் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story