நக்சலைட்டுகள் தாக்குதல் குறித்து சர்ச்சை கருத்து: அசாம் பெண் எழுத்தாளர் கைது


நக்சலைட்டுகள் தாக்குதல் குறித்து சர்ச்சை கருத்து: அசாம் பெண் எழுத்தாளர் கைது
x
தினத்தந்தி 9 April 2021 1:27 AM GMT (Updated: 9 April 2021 1:27 AM GMT)

நக்சலைட்டுகள் தாக்குதல் குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்ட அசாம் பெண் எழுத்தாளர் கைது செய்யப்பட்டார்.

கவுகாத்தி,

சத்தீஷ்கார் மாநிலம் பிஜப்பூர்-சுக்மா மாவட்ட எல்லையில் உள்ள வனப்பகுதியில் கடந்த 3-ந்தேதி பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், 24 பாதுகாப்பு படையினர் பலியானார்கள். 31 பேர் காயமடைந்தனர். ஒரு வீரரை காணவில்லை.

அந்த வீரரை தாங்கள் கடத்திச்சென்று பிணைக்கைதியாக வைத்திருப்பதாக நக்சலைட்டுகள் அறிவித்தனர். பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தரை நியமிக்குமாறு அரசை அவர்கள் வலியுறுத்தினர்.

கடத்திச் செல்லப்பட்ட வீரரின் பெயர் ராகேஷ்வர் சிங் மனாஸ் என்று தெரியவந்தது. அவர் சி.ஆர்.பி.எப்.பின் ‘கோப்ரா’ கமாண்டோ பிரிவின் கமாண்டோவாக இருந்து வருகிறார். காஷ்மீரின் ஜம்முவை சேர்ந்தவர். அவரை விடுவிக்கக்கோரி ஜம்முவில் சாலைமறியல் போராட்டம் நடந்தது.

இந்தநிலையில், கமாண்டோ ராகேஷ்வர் சிங் மனாஸ் நேற்று நக்சலைட்டுகளால் விடுவிக்கப்பட்டார்.

அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவர் உள்பட 2 பிரபல நபர்களை நியமித்து, சத்தீஷ்கார் மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதைத்தொடர்ந்து கமாண்டோவை நக்சலைட்டுகள் விடுவித்தனர். பின்னர், தரண் பகுதியில் உள்ள சி.ஆர்.பி.எப். முகாமுக்கு கமாண்டோ அழைத்து வரப்பட்டார்.

இந்த சூழலில் அசாமைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் சிக்கா சர்மா என்பவர் முகநூல் பதிவில், 'சம்பளம் வாங்கும் மக்கள், பணியின் போது உயிரிழந்தால் அவர்களை தியாகிகள் எனக் குறிப்பிடக் கூடாது. அப்படி பார்த்தால், மின்வாரிய ஊழியர்கள் தங்கள் பணியின் போது மின்சாரம் தாக்கி இறக்க நேரிட்டால், அவர்களையும் தியாகிகள் எனக் குறிப்பிடலாமா?' என கூறியிருந்தார்.

இதுதொடர்பாக பாஜக நிர்வாகிகள் சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில், எழுத்தாளர் சிக்கா சர்மாவை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர் மீது தேச துரோகம், அவதூறு பரப்புதல், அச்சுறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் தற்போது 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Next Story