கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகள்


கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகள்
x

கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

திருவனந்தபுரம்,

கேரளாவில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெறுவதாக இருந்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி ஒதுக்கப்பட்டது. இதனால் தேர்வு ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்ததால் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வு தொடங்கியது. கொரோனா பரவலுக்கு மத்தியில் கடும் கட்டுப்பாடுகளுடன் இந்த தேர்வு நடத்தப்பட்டது. காலையில் பிளஸ்-2 தேர்வும், மதியம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வும் நடந்தது.

இந்த ஆண்டு 2,947 மையங்களில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 226 பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர். வளைகுடா நாடுகளில் 9 மையங்களில் 573 பேரும், லட்சத்தீவில் 9 மையங்களில் 627 பேரும் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதினர்.

அதே போல் 2,004 தேர்வு மையங்களில் 4 லட்சத்து 46 ஆயிரத்து 471 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர். கொரோனா தொற்று காரணமாக முக கவசம் அணிந்து, தனி மனித இடைவெளியுடன் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனையும் நடத்தப்படுகிறது. கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தனி அறையில் தகுந்த பாதுகாப்புடன் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

இந்த தேர்வு தொடர்ச்சியாக 12-ந் தேதி வரை நடக்கிறது. பிறகு விஷூ பண்டிகை விடுமுறைக்கு பிறகு 15-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை இடைவெளி விட்டு தேர்வுகள் நடைபெறுகிறது.

Next Story