கொரோனாவால் கடுமையான பாதிப்பு; மராட்டியத்துக்கு உதவ மத்திய அரசு உறுதியளித்துள்ளது: சரத்பவார்


கொரோனாவால் கடுமையான பாதிப்பு; மராட்டியத்துக்கு உதவ மத்திய அரசு உறுதியளித்துள்ளது: சரத்பவார்
x
தினத்தந்தி 9 April 2021 3:24 AM GMT (Updated: 9 April 2021 3:24 AM GMT)

கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட மராட்டியத்திற்கு உதவுவதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறினார்.

மத்திய மந்திரியுடன் ஆலோசனை

மராட்டியத்தில் நாளுக்கு, நாள் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. போதிய தடு்ப்பூசி வழங்க மத்திய அரசு முன்வரவில்லை என்று மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி குற்றம்சாட்டினார். சிவசேனாவும் மத்திய அரசை விமர்சித்து உள்ளது.

இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவர் சரத்பவார், மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தனுடன் நேற்று முன்தினம் மராட்டிய கொரோனா பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதுகுறித்து அவர் நேற்று கூறியதாவது:-

மத்திய அரசு உறுதி

மராட்டியத்தின் தற்போதைய நிலைமை தீவிரமாக உள்ளது. எனவே நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து அனைத்து தரப்பினரும் அரசுக்கு ஒத்துழைக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.குடிமக்களின் உயிரை பாதுகாக்க சில கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசும் நமக்கு உதவுகிறது. மராட்டியத்தின் தற்போதைய நிலைமை குறித்து நான் மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷவர்தனுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். நிலைமையை சமாளிக்க மராட்டியம் மற்றும் பிற அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு துணை நிற்கும் என அவர் உறுதியளித்துள்ளார்.

வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த மராட்டியத்தில் உள்ள சுகாதார ஊழியர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகின்றனர். நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் வைரஸ் பரவல் சங்கிலியை உடைக்க அரசு சில கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story