மராட்டியத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 376 பேர் பலி


மராட்டியத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 376 பேர் பலி
x
தினத்தந்தி 9 April 2021 4:10 AM GMT (Updated: 9 April 2021 4:10 AM GMT)

மராட்டியத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 376 பேர் உயிரிழந்தனர்.

தாராவியில் புதிதாக 99 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.

பலி அதிரடி உயர்வு

மராட்டியத்தில் நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்தை நெருங்கி இருந்த நிலையில், நேற்று பாதிப்பு சற்று குறைந்தது. அதன்படி புதிதாக 56 ஆயிரத்து 286 பேர் நோய் தொற்றுக்கு ஆளானார்கள். இதனால் இதுவரையிலான பாதிப்பு எண்ணிக்கை 32 லட்சத்து 29 ஆயிரத்து 547 ஆக உயர்ந்தது.

அதேவேளையில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை புதிய உச்சம் அடைந்தது. அதன்படி ஒரே நாளில் 376 பேர் பலியானார்கள். இதுநாள் வரையில் இதுவே அதிகப்பட்ச பலி எண்ணிக்கையாக கருதப்படுகிறது.

தற்போது மாநிலத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் அதிரடியாக உயர்ந்து உள்ளது. அதன்படி 5 லட்சத்து 21 ஆயிரத்து 317 பேர் சிசிச்சை பெற்று வருகின்றனர்.

தாராவி

மும்பையிலும் நேற்று பாதிப்பு சற்று குறைந்தது. நேற்று புதிதாக 8 ஆயிரத்து 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 91 ஆயிரத்து 698 ஆக உயர்ந்தது. இதே போல மும்பையில் கொரோனா தொற்றினால் 23 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 11 ஆயிரத்து 874 ஆக அதிகரித்தது.

தாராவியில் நேற்று புதிதாக 99 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 474 ஆக அதிகரித்து உள்ளது. தாதரில் 121 பேருக்கும், மாகிமில் 134 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதேபோல மும்பை புறநகர் பகுதிகளான வசாய்-விரார் மாநகராட்சியில் 464 பேருக்கும், தானே மாநகராட்சியில் ஆயிரத்து 829 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.


Next Story