84 நாடுகளுக்கு 6.45 கோடி தடுப்பூசிகள் ஏற்றுமதி; மத்திய சுகாதார மந்திரி


84 நாடுகளுக்கு 6.45 கோடி தடுப்பூசிகள் ஏற்றுமதி; மத்திய சுகாதார மந்திரி
x
தினத்தந்தி 9 April 2021 8:03 AM GMT (Updated: 9 April 2021 8:03 AM GMT)

84 நாடுகளுக்கு 6.45 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன என மத்திய சுகாதார மந்திரி தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

நாட்டில் சமீப நாட்களாக தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.  இதனால், அவற்றை கட்டுப்படுத்துவது பற்றி மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் தலைமையில் மந்திரிகள் பங்கேற்கும் 24வது உயர்மட்ட குழு கூட்டம் இன்று காலை நடந்தது.

இந்த கூட்டத்தில் பேசிய மந்திரி ஹர்சவர்தன், நாட்டில் கொரோனாவில் இருந்து இதுவரை மொத்தம் 1,19,13,292 பேர் குணமடைந்து உள்ளனர்.  கடந்த 3 மாதங்களில் குணமடைந்தோர் விகிதம் 96-97% அளவுக்கு உயர்ந்தது.

ஆனால், இந்த விகிதம் 91.22% ஆக சரிவடைந்து உள்ளது.  எனினும், கடந்த 7 நாட்களாக 149 மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் காணப்படவில்லை என கூறியுள்ளார்.

கடந்த 14 நாட்களாக 8 மாவட்டங்களிலும், கடந்த 21 நாட்களாக 3 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்புகள் காணப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.  கடந்த 28 நாட்களாக 63 மாவட்டங்களில் ஒரு நபருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று மந்திரி ஹர்சவர்தன் கூறியுள்ளார்.

சுகாதார பணியாளர்களில் 89 லட்சம் பேர் முதல் டோசும், 54 லட்சம் பேர் 2வது டோசும் பெற்றுள்ளனர்.  முன்கள பணியாளர்களில் 98 லட்சம் பேர் முதல் டோசும், 45 லட்சம் பேர் 2வது டோசும் பெற்றுள்ளனர்.

இதேபோன்று, 45 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்களில் 2.62 கோடி பேர் முதல் டோசும், 5 லட்சத்து 23 ஆயிரத்து 268 பேர் 2வது டோசும் பெற்று உள்ளனர்.  60 வயதுக்கு மேற்பட்டோரில் 3.75 கோடி பேர் முதல் டோசும், 13 லட்சம் பேர் 2வது டோசும் பெற்று உள்ளனர்.

இதுவரை 84 நாடுகளுக்கு 6.45 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.  அவற்றில் 1.05 கோடி தடுப்பூசி டோஸ்கள் 44 நாடுகளுக்கு மானிய அடிப்படையிலும், 3.58 கோடி தடுப்பூசி டோஸ்கள் 25 நாடுகளுக்கு வர்த்தக ஒப்பந்தம் அடிப்படையிலும் மற்றும் 1.82 கோடி தடுப்பூசி டோஸ்கள் 39 நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பின் கோவேக்ஸ் வசதியின் அடிப்படையிலும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன என அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story