மராட்டியத்தில் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட முகாம்கள் மூடப்பட்டன


மராட்டியத்தில் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட முகாம்கள் மூடப்பட்டன
x
தினத்தந்தி 9 April 2021 12:01 PM GMT (Updated: 9 April 2021 12:01 PM GMT)

மராட்டிய மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக 100-க்கும் மேற்பட்ட தடுப்பூசி முகாம்கள் மூடப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்தார்.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக 100-க்கும் மேற்பட்ட தடுப்பூசி முகாம்கள் மூடப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்தார்.

இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலேயே கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசையில் மராட்டிய மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இங்கு கொரோனா தொற்றின் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.

தினசரி சுமார் 60 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி வரும் நிலையில், இரவு நேர ஊரடங்கு போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், முககவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தடுப்பூசி கையிருப்பு குறித்து பேட்டி அளித்த மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோப், மாநிலத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாகவும் பற்றாக்குறையால் தடுப்பூசி முகாம்கள் மூடப்பட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் வேதனையுடன் தெரிவித்தார்.

மேலும் தடுப்பூசி பற்றாக்குறை குறித்து மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தனிடம் தெரிவித்துள்ளதாகவும், பற்றாக்குறையால் மும்பையில் 26 முகாம்களும், புனேவில் 100 முகாம்களும் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேபோல் டெல்லியிலும் இன்னும் 5 நாட்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி கையிருப்பில் உள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். டெல்லி அரசை குற்றம்சாட்டுவதை விடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு, மாநில அரசுகளுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து, மத்திய அரசு அடுத்த இரு தினங்களுக்குள் போதிய கொரோனா தடுப்பூசிகளை அனுப்பாவிட்டால் ஒடிசா மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்படும் அபாயம் உள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

இந்த் நிலையில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி  ஹர்ஷ்வர்தன்  கூறி  உள்ளதாவது:- 

கொரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடு இல்லை என்றும், 4 கோடியே 30 லட்சம் முறை செலுத்தும் அளவில் கொரோனா தடுப்பு மருந்து கையிருப்பில் உள்ளது.

எந்தவித பாகுபாடும் இல்லாமல் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியாக கருதிதான் கொரோனா தடுப்பு மருந்துகளை மத்திய அரசு விநியோகித்து வருகிறது. இதில் பா.ஜ.க.ஆள்கிற மாநிலங்களில் ஒரு வகையிலும், பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் வேறு வகையில் மருந்து விநியோகம் நடப்பதாக எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் முதலை கண்ணீர் வடிப்பது அவர்களது இயலாமையை மறைக்க மேற்கொள்ளும் செயல்.

நாட்டிலேயே அதிகளவிலான கொரோனா தடுப்பூசிகளை பெற்று டாப் மூன்று மாநிலங்களில் இரண்டு மாநிலங்கள் பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநிலங்கள் என நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார். 

Next Story