ரபேல் ஒப்பந்த முறைகேடு குறித்து பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் - காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்தல்


ரபேல் ஒப்பந்த முறைகேடு குறித்து பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் - காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 9 April 2021 9:25 PM GMT (Updated: 9 April 2021 9:25 PM GMT)

ரபேல் ஒப்பந்த முறைகேடு குறித்து பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்தி உள்ளது.

புதுடெல்லி,

பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு ரூ.59 ஆயிரம் கோடிக்கு பிரான்ஸ் நாட்டுடன் இந்தியா ஒப்பந்தம் போட்டது. இந்த ஒப்பந்தத்துக்காக இந்தியாவை சேர்ந்த இடைத்தரகர் ஒருவருக்கு ரூ.9 கோடிக்கு மேல் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக பிரான்ஸ் நாட்டு ஆன்லைன் செய்தி நிறுவனம் ஒன்று சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.

இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மத்திய அரசை காங்கிரஸ் கட்சி ஏற்கனவே வலியுறுத்தி இருந்தது. இந்த விவகாரத்தில் நேற்று மீண்டும் குற்றச்சாட்டை வைத்த காங்கிரஸ் கட்சி, இந்த முறைகேடு தொடர்பாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு பதில் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், ‘இந்தியாவின் மிகப்பெரிய ராணுவ ஒப்பந்தம் தொடர்பான மோடி அரசின் முடிவுகளில் ஒரு தனிநபர் எப்படி செல்வாக்கு செலுத்த முடியும்? இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டிய தேவை இல்லையா? இந்த விவகாரத்தில் அரசு இன்னும் ஒளிந்திருக்க முடியாது. நாட்டு மக்களுக்கு நிச்சயம் பதில் அளித்தாக வேண்டும்’ என்று கூறினார்.

ரபேல் ஒப்பந்தத்தில் இருந்து ஊழல் எதிர்ப்பு பிரிவுகளை நீக்கியது ஏன்? என கேள்வி எழுப்பிய சுர்ஜேவாலா, இது குறித்து பிரதமர் மோடிக்கு தெரியுமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த ஒப்பந்தத்தில் லஞ்சம், ஊழல் மட்டுமின்றி அரசின் கஜானாவில் இருந்து ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

Next Story