இரவு நேர ஊரடங்கு: பெங்களூரு நகரில் தேவையில்லாமல் சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் - போலீஸ் கமிஷனர் கமல்பந்த் எச்சரிக்கை


இரவு நேர ஊரடங்கு: பெங்களூரு நகரில் தேவையில்லாமல் சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் - போலீஸ் கமிஷனர் கமல்பந்த் எச்சரிக்கை
x
தினத்தந்தி 9 April 2021 9:26 PM GMT (Updated: 9 April 2021 9:26 PM GMT)

பெங்களூருவில் இரவில் பயணிப்போரிடம் டிக்கெட் இருப்பது கட்டாயம் என்றும், தேவையில்லாமல் சுற்றி திரிந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் போலீஸ் கமிஷனர் கமல்பந்த் எச்சரித்துள்ளார்.

பெங்களூரு:

  பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல்பந்த் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

வாகனங்கள் பறிமுதல்

  பெங்களூருவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இரவு நேர ஊரடங்கை அரசு அமல்படுத்தி உள்ளது. ஏற்கனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பெங்களூரு நகரில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 14-ந் தேதியில் இருந்தே பெங்களூருவில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கிறது. இரவு நேர ஊரடங்கு நாளை (அதாவது இன்று) இரவு 10 மணியில் இருந்து மறுநாள் காலை 5 மணி அமலில் இருக்கும்.

  இரவு நேர ஊரடங்கின் போது தேவையில்லாமல் வெளியே சுற்றி திரிவதற்கு பெங்களூரு நகரவாசிகளுக்கு அனுமதி கிடையாது. தேவையில்லாமல் வெளியே சுற்றி திரிந்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இரவு நேர ஊரடங்கை மக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். தேவையில்லாமல் இரவு 10 மணிக்கு மேல் வாகனங்களில் சுற்றி திரிந்தால், அந்த வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுவதுடன், வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்.

டிக்கெட் கட்டாயம்

  ஆஸ்பத்திரிகள் திறந்தே இருக்கும். நோயாளிகளுடன், உதவி செல்பவர்களுக்கும் எந்த விதமான தடையும் இல்லை. அத்தியாவசிய தேவைக்கான பொருட்களை எடுத்து செல்லும் வாகனங்கள் செல்லலாம். சரக்கு வாகனங்கள் செல்வதற்கும் தடை இல்லை. இரவு நேரங்களில் பணியாற்றுபவர்கள், எப்போதும் போல வேலைக்கு செல்லலாம். அவர்கள் தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்திலேயோ அல்லது தொழிற்சாலையிலேயோ இருக்க வேண்டும். அதிகாலை 5 மணிக்கு பின்பு அவா்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

  ஆன்லைன் மூலமாக உணவு பொருட்கள் வினியோகிக்கும் விற்பனை பிரதிநிதிகள் இரவு 10 மணிக்கு மேல் செல்வதற்கும் தடை கிடையாது. இரவு 10 மணிக்கு மேல் பெங்களூருவில் இருந்து வேறு இடத்திற்கு செல்பவர்கள், அங்கிருந்து பெங்களூருவுக்கு கார், பஸ், ரெயில், விமானத்தில் வருபவர்கள் கண்டிப்பாக டிக்கெட் வைத்திருக்க வேண்டும். அந்த டிக்கெட்டை காட்டி செல்லலாம். அதுபோல, மதுபான விடுதிகள், மதுக்கடைகள் உள்ளிட்ட கடைகள் 10 மணிக்கு பின்பு திறந்திருந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேம்பாலங்கள் மூடப்படும்

  கடைகள், பிற நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் 10 மணிக்குள் வீட்டுக்குள் சென்று விட வேண்டும். பெங்களூருவில் 10 மணிக்கு பின்பு ஊரடங்கு அமலில் இருப்பதால், நகரில் உள்ள அனைத்து மேம்பாலங்களும் மூடப்படும். சாலைகளும் தடுப்பு வேலிகள் அமைத்து மூடப்படும். இரவு 10 மணிக்கு மேல் ஊரடங்கு இருப்பதால், பாஸ் எதுவும் வாங்க வேண்டிய அவசியமில்லை. பாஸ் தேவையில்லை.

  பெங்களூருவில் ஊரடங்கு அமலில் இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. இரவு 10 மணிக்கு மேல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். நகர ஆயுதப்படை, கர்நாடக ஆயுதப்படை, ஊர்க்காவல் படையினர் கூடுதலாக குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது எம்.டி.எம்.ஏ. சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story