தேசிய செய்திகள்

அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின்போது இளம்பெண் சாவு + "||" + Adolescent death during childbirth

அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின்போது இளம்பெண் சாவு

அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின்போது இளம்பெண் சாவு
பெங்களூரு அருகே தொட்டபள்ளாப்புராவில், பிரசவத்தின்போது இளம்பெண் ஒருவர் பலியானார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது குடும்பத்தினர் இளம்பெண்ணின் உடலுடன் அரசு ஆஸ்பத்திரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெங்களூரு:

நிறைமாத கர்ப்பிணி

  பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா டவுன் ராஜீவ்காந்தி படாவனே பகுதியைச் சேர்ந்தவர் மமதா(வயது 26). இவருக்கும், துமகூரு மாவட்டம் இரேஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் மமதா, தனது கணவருடன் இரேஹள்ளி கிராமத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் மமதா கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து அவர் பிரசவத்திற்காக தனது தாய் வீட்டுக்கு வந்து தங்கியிருந்தார்.

  நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மமதாவுக்கு ஏப்ரல் மாதம்(இம்மாதம்) 7-ந் தேதி குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதன்பேரில் கடந்த 7-ந் தேதி மமதாவை அவருடைய குடும்பத்தினர் தொட்டபள்ளாப்புராவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பிரசவ வலி

  ஆனால் அவருக்கு பிரசவ வலி ஏற்படவில்லை என்று தெரிகிறது. இதனால் அவருக்கு பிரசவ வலி ஏற்பட டாக்டர்கள் ஊசி போட்டனர். அதையடுத்து மமதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவருக்கு சுக பிரசவம் மேற்கொள்ள டாக்டர்கள் முயன்றனர். ஆனால் அது முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள டாக்டர்கள் முடிவு செய்தனர். அதையடுத்து மமதாவுக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

  இதில் மமதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் தொடர்ந்து மமதாவுக்கு ரத்தப்போக்கு அதிகமாக இருந்தது. இதனால் அவரை உடனடியாக டாக்டர்கள் மேல்சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள வாணி விலாஸ் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போராட்டம்

  அங்கு மமதாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மமதா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடலை, அவருடைய குடும்பத்தினரிடம் டாக்டர்கள் ஒப்படைத்தனர். அதையடுத்து மமதாவின் உடலை தொட்டபள்ளாப்புரா அரசு ஆஸ்பத்திரி எதிரில் வைத்து அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  டாக்டர்கள் அலட்சியத்தால்தான் மமதா இறந்துவிட்டதாகவும், அறுவை சிகிச்சை மேற்கொள்ள ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாகவும் குற்றம்சாட்டி அவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் உறுதி

  இதுபற்றி அறிந்த தொட்டபள்ளாப்புரா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மமதாவின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் அவர்கள் அங்கிருந்து மமதாவின் உடலுடன் புறப்பட்டு சென்றனர்.