மும்பையில் கொரோனா கட்டுப்பாடுகள் அதிகரிப்பு; 6 ரெயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் ரத்து


மும்பையில் கொரோனா கட்டுப்பாடுகள் அதிகரிப்பு; 6 ரெயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் ரத்து
x
தினத்தந்தி 10 April 2021 3:08 AM GMT (Updated: 10 April 2021 3:08 AM GMT)

பொதுமக்கள் கூடுவதை தடுக்க மும்பையில் 6 ரெயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக மத்திய ரெயில்வே அறிவித்து உள்ளது.

மும்பை,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த மாதம் மத்திய ரெயில்வேக்கு உட்பட்ட ரெயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க ரூ.10 ஆக இருந்த பிளாட்பாரம் டிக்கெட்டை ரூ.50 ஆக அதிகரிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் ரெயில் நிலையங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்கவும், பயணிகளை வழியனுப்ப வருபவர்களை கட்டுப்படுத்தவும் மத்திய ரெயில்வே ரெயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் விற்பனையை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

இது குறித்து மத்திய ரெயில்வே தலைமை செய்தி தொடர்பாளர் சிவாஜி சுத்தார் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

“மும்பையில் தற்போது கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ரெயில் நிலையங்களில் கோடை காலத்தையொட்டி பயணிகளை வழியனுப்ப வருபவர்களால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

மும்பையின் முக்கிய ரெயில் நிலையங்களான மும்பை சி.எஸ்.எம்.டி, குர்லா டெர்மினல், கல்யாண், தானே, தாதர், பன்வெல் ஆகிய 6 ரெயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் வினியோகம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் தேவையின்றி ரெயில்நிலையங்களில் கூடுவது தடுக்கப்படும். சமூக இடைவெளியை பின்பற்ற முடியும்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story