மேற்கு வங்காள தேர்தல்: பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி வாக்கு பதிவு


மேற்கு வங்காள தேர்தல்:  பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி வாக்கு பதிவு
x
தினத்தந்தி 10 April 2021 9:27 AM GMT (Updated: 10 April 2021 9:27 AM GMT)

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலின் 4வது கட்ட வாக்கு பதிவில் பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி இன்று தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள சட்டசபைக்கு 8 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு இதுவரை 3 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது.  4வது கட்ட தேர்தல் இன்று காலை 7 மணி தொடங்கி நடந்து வருகிறது.  பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்து வருகின்றனர்.

ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜனதா, காங்கிரஸ்-இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம், 373 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.  அவர்களில் வெற்றி பெறும் வேட்பாளர்களை, ஒரு கோடியே, 15 லட்சத்து, 81 ஆயிரத்து, 22 வாக்காளர்கள் நிர்ணயிக்க உள்ளனர்.

ஹவுரா, தெற்கு 24 பர்கானாஸ், ஹூக்ளி, அலிபுர்துவார், கூச் பெஹார் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 44 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது.  இதில், கூச் பெஹார் பரபரப்பான மாவட்டமாக கருதப்படுகிறது. மொத்தமுள்ள, 15 ஆயிரத்து 940 ஓட்டுச்சாவடிகளுக்கு, 789 கம்பெனி மத்திய ஆயுதப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கு வங்காள மாநில சட்டசபை தேர்தலில் காலை 9:50 மணி நிலவரப்படி 15.85% வாக்குகளும், 11.05 மணி நிலவரப்படி 16.65% வாக்குகளும் பதிவாகி இருந்தன என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.  எனினும், மதியம் வாக்கு சதவீதம் அதிகரித்தது.

இதன்படி, மதியம் 1.37 மணியுடன் முடிவடைந்த வாக்கு பதிவின்படி, 52.89% அளவுக்கு வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.  
மேற்கு வங்காளத்தில் காலையில் வாக்கு பதிவு தொடங்கியதில் இருந்து அடுத்தடுத்து பரபரப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன.  சுன்சுரா தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் லாக்கட் சாட்டர்ஜி சென்ற கார் மீது உள்ளூர்வாசிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.  இதில், அவரது கார் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

இந்த சூழலில், செய்தி சேகரிக்க சென்ற ஊடகக்காரர்களின் கார்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.  அவர்களது கார்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேற்கு வங்காளத்தின் கூச் பெஹாரில் திடீரென துப்பாக்கி சூடு நடந்துள்ளது.  இந்த சம்பவத்தில் 4 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.  4 பேர் காயமடைந்தனர்.  அவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

சி.ஆர்.பி.எப். வீரர்களே துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர் என  மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.  ஆனால், துப்பாக்கி சூடு நடந்த பூத்தில் எங்களுடைய வீரர்கள் பணியில் இல்லை, அந்த சம்பவத்துடன் எங்களுக்கு தொடர்பும் இல்லை என்று சி.ஆர்.பி.எப். விளக்கம் அளித்துள்ளது.

இந்த பரபரப்பு நிறைந்த தேர்தல் களத்தில், பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி இன்று தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.  அவர் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பெஹாலா பகுதியில் பரீஷா சசிபூஷண் ஜனகல்யாண் வித்யாபீடத்தில் அமைந்த பூத்துக்கு சென்று தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

Next Story