மேற்குவங்காளம்: துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தை நாளை பார்வையிடுகிறார் மம்தா - பேரணி நடத்தவும் திட்டம்


மேற்குவங்காளம்: துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தை நாளை பார்வையிடுகிறார் மம்தா - பேரணி நடத்தவும் திட்டம்
x
தினத்தந்தி 10 April 2021 10:19 AM GMT (Updated: 10 April 2021 10:19 AM GMT)

மேற்குவங்காளத்தில் வாக்குச்சாவடி மையம் அருகே இன்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.

கொல்கத்தா,

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 3 கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ளது. 4-ம் கட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 44 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.

எஞ்சிய 4 கட்டங்களுக்கு முறையே ஏப்ரல் 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இன்று நடைபெற்று வரும் 4-ம் கட்ட தேர்தலில் மேற்குவங்காளத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. வேட்பாளர்கள், ஊடகங்கள் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இதற்கிடையில், அம்மாநிலத்தின் கூச் பெஹார் மாவட்டம் சீத்தல்குச்சி தொகுதிக்கு உள்பட்ட ஜார்பட்கி என்ற பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு அருகே இன்று திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சி.ஆர்.பி.எப்.) துப்பாக்கிச்சூடு நடத்தியதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால், வன்முறை நடந்த வாக்குச்சாவடியில் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என்றும் இந்த துப்பாக்கிச்சூட்டில் தங்கள் வீரர்கள் ஈடுபடவில்லை என்றும் சிஆர்பிஎப் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.  

இந்நிலையில், கூச் பெஹார் மாவட்டம் சீத்தல்குச்சி தொகுதியில் உள்ள ஜார்பட்கி பகுதியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்தை மேற்குவங்காள முதல்மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நாளை நேரில் பார்வையிடுகிறார். அதன்பின்னர் அங்கிருந்து அவர் பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளார்.

Next Story