150 பேர் கொண்ட கும்பல் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிகளை பறிக்க முயன்றதால் துப்பாக்கிச்சூடு - மத்திய தொழிற்பாதுகாப்பு படை விளக்கம்


150 பேர் கொண்ட கும்பல் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிகளை பறிக்க முயன்றதால் துப்பாக்கிச்சூடு - மத்திய தொழிற்பாதுகாப்பு படை விளக்கம்
x
தினத்தந்தி 10 April 2021 12:48 PM GMT (Updated: 10 April 2021 12:48 PM GMT)

மேற்குவங்காளத்தில் தேர்தலின் போது 150க்கும் மேற்பட்ட கும்பல் பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிகளை பறிக்க முயன்றபோது பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

கொல்கத்தா,

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 3 கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ளது. 4-ம் கட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 44 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்று வரும் 4-ம் கட்ட தேர்தலில் மேற்குவங்காளத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. வேட்பாளர்கள், ஊடகங்கள் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இதற்கிடையில், அம்மாநிலத்தின் கூச் பெஹார் மாவட்டம் சீத்தல்குச்சி தொகுதிக்கு உள்பட்ட ஜார்பட்கி என்ற பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு அருகே இன்று திடீரென வன்முறை ஏற்பட்டது. இந்த மோதலில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டது யார் என்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தன. சிஆர்பிஎஃப் எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டினார். ஆனால், தங்கள் வீரர்கள் குறிப்பிட்ட அந்த வாக்குச்சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என்று சிஆர்பிஎஃப் அறிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்டது  சிஐஎஸ்எஃப் எனப்படும் மத்திய தொழிற்பாதுகாப்பு படைப்பிரிவின் விரைவு எதிர்வினைப்படை (Quick Reaction Team) என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, மத்திய தொழிற்பாதுகாப்பு படைப்பிரிவு அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது.

அந்த அறிக்கையில் கூறியதாவது, 

(கூச் பெஹார் மாவட்டம் சீத்தல்குச்சி தொகுதி) வாக்குச்சாவடி எண் 126 அருகே இன்று காலை 9.35 மணியளவில் மத்திய தொழிற்படை பிரிவின் (சிஎஸ்எஃப்) விரைவு எதிர்வினைப்படை வீரர்கள் உள்ளூர் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது 50 முதல் 60 பேர் கொண்ட கும்பல் சிஎஸ்எஃப் விரைவு எதிர்வினைப்படையினர் மீது தாக்குதல் நடத்தியது.   

இதனால், தற்காப்புக்காக சிஎஸ்எஃப் விரைவு எதிர்வினைப்படையினர் வானத்தை நோக்கி 6 முறை துப்பாக்கியால் சுட்டு கும்பலை கலையச்செய்தனர். அதன்பின், 1 மணி நேரம் கழித்து கிட்டத்தட்ட 150 பேர் கொண்ட மற்றொரு கும்பல் இணைந்துகொண்டு வாக்குச்சாவடி எண் 186-ல் நுழைந்து அங்கு இருந்த தேர்தல் அதிகாரிகளை தாக்கத்தொடங்கினர்.

முதலில் அந்த கும்பல் உள்ளூர் படையினர் மற்றும் தேர்தல் பணியில் இருந்த சுகாதார ஊழியரை தாக்கினர். அவர்களை சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் தடுக்க முயற்சித்தனர். ஆனால், அந்த கும்பல் பிற தேர்தல் அதிகாரிகளையும் தாக்கத்தொடங்கினர். அந்த கும்பலில் சிலர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படையினரின் (சிஐஎஸ்எஃப்) துப்பாக்கியை பறித்து செல்ல முயற்சித்தனர். 

இதனால், சிஐஎஸ்எஃப் வீரர்கள் வானத்தை நோக்கி 2 முறை துப்பாக்கியால் சுட்டனர். ஆனால், அந்த எச்சரிக்கையை கும்பல் கண்டுகொளவில்லை. அப்போது, சிஐஎஸ்எஃப் படையின் விரைவு எதிர்வினைப்படையினர், போலீசார் அந்த இடத்திற்கு வந்தனர். ஆனால், அந்த கும்பல் தொடர்ந்து சிஐஎஸ்எஃப் வீரர்களை நோக்கி தொடர்ந்து முன்னோக்கி வந்தனர். ஆகையால், தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதை உணர்ந்த சிஐஎஸ்எஃப் வீரர்கள் அந்த கும்பலை நோக்கி 7 முறை துப்பாக்கியால் சுட்டனர். இதில் அந்த கும்பலில் 5 முதல் 6 பேர் காயமடைந்திருக்கலாம் மற்றும் உயிரிழந்திருக்கலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த துப்பாக்கிச்சூடு நடத்தியது மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சிஆர்பிஎஃப்) என்று தகவல் வெளியான நிலையில் தற்போது மத்திய தொழிற்பாதுகாப்பு படையின் (சிஐஎஸ்எஃப்) விளக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

சிஆர்பிஎஃப் மற்றும் சிஐஎஸ்எஃப் ஆகிய இரு படைகளுமே மத்திய பாதுகாப்பு படையின் பிரிவுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story