தங்கள் உயிரை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதால் வேறு வழியின்றி பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர் - தேர்தல் ஆணையம் விளக்கம்


தங்கள் உயிரை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதால் வேறு வழியின்றி பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர் - தேர்தல் ஆணையம் விளக்கம்
x
தினத்தந்தி 10 April 2021 2:56 PM GMT (Updated: 10 April 2021 2:56 PM GMT)

தங்கள் உயிரையும், வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்டவற்றையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதால் வேறு வழியின்றி பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

மேற்குவங்காளத்தில் 44 தொகுதிகளுக்கு இன்று 4-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இன்று நடைபெற்ற தேர்தலில் ஒருசில இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. குறிப்பாக,  அம்மாநிலத்தின் கூச் பெஹார் மாவட்டம் சீத்தல்குச்சி தொகுதிக்கு உள்பட்ட ஜார்பட்கி என்ற பகுதியில் உள்ள வாக்குச்சாவடி அருகே மோதல் ஏற்பட்டது. அந்த வாக்குச்சாவடியை 100-க்கும் அடங்கிய கும்பல் முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்டது. 

இதனால், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி கும்பலை கலைத்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச்சூடு நடைபெற்ற வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சீத்தல்குச்சி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வாக்குச்சாவடி அருகே இன்று காலை உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒரு வாலிபருக்கு உதவ பாதுகாப்பு படையினர் (சிஐஎஸ்எஃப்) முயற்சி செய்தனர். அப்போது, அந்த வாலிபரை சிஐஎஸ்எஃப் வீரர்கள் தாக்குவதாக உள்ளூர்வாசிகள் தவறுதலாக நினைத்துக்கொண்டனர். மேலும், அந்த கிராமத்தை சேர்ந்த 300 முதல் 350 பேர் அங்கு திரண்டனர். 

தவறுதலாக புரிந்துகொண்டதால் ஆத்திரத்தில் இருந்த அந்த கும்பல் பயங்கர ஆயுதங்களை கொண்டு சிஐஎஸ்எஃப் வீரர்களை தாக்கினர். அந்த கும்பலில் சிலர் சிஐஎஸ்எஃப் வீரர்களின் துப்பாக்கிகள், ஆயுதங்களை பறிக்க முயற்சித்தனர். 

இதனால், தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ளவும், வாக்குப்பதிவு எந்திரம் உள்ளிட்ட வாக்குப்பதிவு தொடர்புடைய அரசுக்கு சொந்தமான கருவிகளை பாதுகாக்கவும் வேறு வழியின்றி சிஐஎஸ்எஃப் வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களில் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்’ என
தெரிவிக்கப்பட்டுள்ளது.      

Next Story