மே 2-ம் தேதிக்கு பிறகு மம்தா ராஜினாமா செய்வார் - மே.வங்காள பாஜக தலைவர் பேச்சு


மே 2-ம் தேதிக்கு பிறகு மம்தா ராஜினாமா செய்வார் - மே.வங்காள பாஜக தலைவர் பேச்சு
x
தினத்தந்தி 10 April 2021 5:03 PM GMT (Updated: 10 April 2021 5:03 PM GMT)

மே 2-ம் தேதிக்கு பிறகு முதல்மந்திரி பதவியை மம்தா பானர்ஜி ராஜினாமா செய்வார் என்று மேற்குவங்காள பாஜக தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

மேற்குவங்காளத்தில் 44 தொகுதிகளுக்கு இன்று 4-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இன்று நடந்த தேர்தலில் மாநிலத்தின் பல பகுதிகளில் வன்முறை அரங்கேறியது. குறிப்பாக, அம்மாநிலத்தின் கூச் பெஹார் மாவட்டம் சீத்தல்குச்சி தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடி அருகே வன்முறை ஏற்பட்டது. 

இந்த வன்முறை சம்பவத்தின் போது பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் (சிஐஎஸ்எஃப்) துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், இந்த துப்பாக்கிச்சூடு விவகாரத்தை கையில் எடுத்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்காள முதல்மந்திரியுமான மம்தா பானர்ஜி, இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பொறுப்பேற்று உள்துறை மந்திரி அமித்ஷா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மம்தா பானர்ஜியின் கருத்துக்கு மேற்குவங்காள பாஜக தலைவர் திலீப் கோஷ் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக திலீப் கோஷ் கூறுகையில், மே 2-ம் தேதிக்கு பிறகு (முதல்மந்திரி பதவியை) மம்தா பானர்ஜி ராஜினாமா செய்வார். அமித்ஷா ராஜினாமா செய்ய தேவையில்ல்லை. அமித்ஷா உள்துறை மந்திரியாக இருப்பதால் தான் நாடு பாதுகாப்பாக உள்ளது. சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் முதல்முறையாக நடத்தப்படுகிறது. குழப்பத்தை உருவாக்குபவர்கள் தண்டிக்கப்படுகின்றனர்’ என்றார்.  

Next Story