உலகிலேயே மிகவும் வேகமாக 10 கோடி தடுப்பூசி போட்டு இந்தியா சாதனை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 10 April 2021 7:51 PM GMT (Updated: 10 April 2021 7:51 PM GMT)

உலகிலேயே மிகவும் வேகமாக 10 கோடி தடுப்பூசிகளை போட்டு இந்தியா சாதனை படைத்துள்ளது.

புதுடெல்லி, 

இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. சுகாதார பணியாளர்கள், முன்கள வீரர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகள் என படிப்படியாக பயனாளிகளின் பட்டியல் நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 1-ந் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அரசு மற்றும் தனியார் மையங்களில் நடந்து வரும் முகாம்களில் தினமும் லட்சக்கணக்கான பயனாளிகள் தடுப்பூசி போட்டு வருகின்றனர். இதனால் நாளொன்றுக்கு போடப்படும் தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை சராசரியாக 38 லட்சத்துக்கு மேல் சென்றிருக்கிறது.

இதன் மூலம் இந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை நேற்று 10 கோடியை கடந்து விட்டது. உலக அளவில் மிக வேகமாக இந்த எண்ணிக்கையை அடைந்த நாடுகளில் இந்தியா முதல் இடத்தை பெற்றுள்ளது.

அந்த வகையில் அமெரிக்கா இந்த எண்ணிக்கையை 89 நாட்களில்தான் அடைந்தது. சீனாவோ 102 நாட்களில்தான் 10 கோடி என்ற எண்ணிக்கையை எட்டியது குறிப்பிடத்தக்கது.

Next Story