போக்குவரத்து ஊழியர்களுடன் எடியூரப்பா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - குமாரசாமி


போக்குவரத்து ஊழியர்களுடன் எடியூரப்பா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - குமாரசாமி
x
தினத்தந்தி 10 April 2021 9:36 PM GMT (Updated: 10 April 2021 9:36 PM GMT)

பிடிவாதமாக இருப்பதால் மக்களுக்கு தான் பாதிப்பு ஏற்படுவதாகவும், எனவே முதல்-மந்திரி எடியூரப்பா, போக்குவரத்து ஊழியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

  முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று பீதரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது;-

பிடிவாதத்தை கைவிட்டு...

  போக்குவரத்து ஊழியர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 4-வது நாளாக ஊழியர்கள் போராட்டத்தை தொடர்வதால், மக்கள் பஸ்கள் கிடைக்காமலும், சொந்த ஊருக்கு செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுடன் அரசு இதுவரை பேச்சு வார்த்தையில் ஈடுபடாமல் இருப்பது சரியல்ல.

  மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதற்கு தான் அரசு வேண்டும். அரசின் பொறுப்பு, கடமையும் அது தானே. முதல்-மந்திரி எடியூரப்பா தனது பிடிவாதத்தை கைவிட்டு விட்டு உடனடியாக போக்குவரத்து ஊழியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். ஊழியாகளின் மனதை மாற்ற முதல்-மந்திரி எடியூரப்பா முயற்சிக்க வேண்டும். முதல்-மந்திரியோ, மந்திரிகளோ வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல.

பிரச்சினைக்கு தீர்வு

  இந்த பதவிகள் யாருக்கும் நிரந்தரமாக இருக்க சாத்தியமில்லை. பஸ்கள் இல்லாமல் மக்கள் அவதிப்படுவதால் முதலில் அந்த பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுப்பதே ஒரு அரசின் முக்கிய செயலாக இருக்க வேண்டும்.

  போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றாவிட்டால், மிகப்பெரிய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். அது நடைபெற்று விடக்கூடாது. ஊழியர்கள் 4-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டும், அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த முடியவில்லை எனில், விதானசவுதாவில் இந்த அரசு இருக்க கூடாது.

பா.ஜனதா காணாமல் போய்விடும்

  அரசின் கஜானாவை காலி செய்துவிட்டு, மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் இருந்தால், பா.ஜனதா கட்சி காணாமல் போய் விடும். எனவே பிடிவாதத்தை கைவிட்டு விட்டு ஊழியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுப்பதுடன், மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.

  அதில், முதல்-மந்திரி எடியூரப்பாவும், மந்திரிகளும் கவனம் செலுத்த வேண்டும். இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தி இருப்பதன் மூலம் கொரோனா பரவல் கட்டுக்குள் வருமா? என்பதை பொறுத்திருந்து தான் பாா்க்க வேண்டும்.
  இவ்வாறு குமாராமி கூறினார்.

Next Story