கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவே இரவு நேர ஊரடங்கு அமல் - மந்திரி சுதாகர்


கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவே இரவு நேர ஊரடங்கு அமல் - மந்திரி சுதாகர்
x
தினத்தந்தி 10 April 2021 9:51 PM GMT (Updated: 10 April 2021 9:51 PM GMT)

கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவே இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதாகவும், மக்கள் அலட்சியமாக இருக்க கூடாது என்றும் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

  சிக்பள்ளாப்பூரில் நேற்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

சங்கிலியை உடைக்க...

  கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பெங்களூரு உள்பட 8 நகரங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 8 நகரங்களில் இன்னும் 10 நாட்கள் இரவு ஊரடங்கு அமலில் இருக்கும். கொரோனா பரவல் சங்கிலி தொடர் போன்றது. ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு பரவிக் கொண்டே இருக்கும். இந்த சங்கிலியை உடைத்தால் மட்டுமே கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடியும். இதற்காக தான் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

  சில வியாபாரங்கள் இரவு 10 மணிக்கு மேல் தான் நடக்கிறது. இதன்மூலம் வியாபாரிகளுக்கு லாபமும் கிடைக்கிறது. தற்போது இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால், வியாபாரிகளுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படும். அதன் காரணமாக தான் இரவு நேர ஊரடங்குக்கு வியாபாரிகள் எதிா்ப்பு தெரிவிக்கிறார்கள். என்றாலும், இரவு நேர ஊரடங்குக்கு வியாபாரிகள் உள்பட அனைத்து தரப்பினரும் ஒததுழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

அலட்சியம் வேண்டாம்

  மாநிலத்தில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்த கூடாது என்று நினைத்தால், இரவு நேர ஊரடங்குக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கொரோனா பரவல் விவகாரத்தில் மக்கள் அலட்சியமாக இருக்கிறார்கள். மக்களின் அலட்சியமே தற்போது கொரோனா பரவலுக்கு முக்கிய காரணமாகும்.

  எனவே மக்கள் கொரோனா விவகாரத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம். அரசின் விதிமுறைகளை ஒவ்வொரு மக்களும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மக்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.

அரசுக்கு இக்கட்டான நிலை

  பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின் பேரிலேயே கர்நாடகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்களிடையே கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுவதற்கு இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய இக்கட்டான நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

  வியாபாரிகளுக்கு கஷ்டத்தை கொடுக்க வேண்டும், அவர்களது வியாபாரத்தில் நஷ்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது அரசின் நோக்கம் அல்ல. நாடு முழுவதும் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. இந்த சந்தர்ப்பத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமானதாகும்.
  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story