நோட்டீசு அனுப்பியும் வேலைக்கு திரும்பாததால் போக்குவரத்து ஊழியர்கள் 334 பேர் பணி நீக்கம் - கர்நாடக அரசு அதிரடி


நோட்டீசு அனுப்பியும் வேலைக்கு திரும்பாததால் போக்குவரத்து ஊழியர்கள் 334 பேர் பணி நீக்கம் - கர்நாடக அரசு அதிரடி
x
தினத்தந்தி 10 April 2021 9:56 PM GMT (Updated: 10 April 2021 9:56 PM GMT)

நோட்டீசு அனுப்பியும் வேலைக்கு திரும்பாததால் போக்குவரத்து ஊழியர்கள் 334 பேரை பணியில் இருந்து நீக்கி அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

பெங்களூரு:

பணிக்கு வர நோட்டீசு

  கர்நாடகத்தில் ஊதிய உயர்வு உள்பட 9 அம்ச கோரிக்களை வலியுறுத்தி போக்குவரத்து கழக ஊழியர்கள் கடந்த 7-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தம் நேற்றுடன் 4-வது நாளை எட்டியுள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், இல்லையெனில் எஸ்மா சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது. ஆனால் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட ஊழியர்கள் மறுத்து வருகின்றனர்.

  இந்த நிலையில், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை பணிக்கு திரும்பும்படி கோரி அதிகாரிகள் தொடா்ந்து நோட்டீசு அனுப்பி வருகின்றனர். மேலும் ஊழியர்களை கூண்டோடு பணி இடமாற்றம் செய்யும் பணிகளையும் அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். நேற்று முன்தினம் வரை நோட்டீசு அனுப்பியும் பணிக்கு திரும்பாத 118 ஊழியர்களை வேலையில் இருந்து அரசு நீக்கி இருந்தது.

334 பேர் நீக்கம்

  இந்த நிலையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிக்கு திரும்பும்படி அதிகாரிகள் நோட்டீசு அனுப்பி வைத்திருந்தார்கள். ஆனால் அவர்கள் நேற்று பணிக்கு திரும்பவில்லை. இதையடுத்து, நேற்று ஒரே நாளில் 216 ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் நோட்டீசு அனுப்பியும் பணிக்கு வராத 334 பேர் வேலையில் இருந்து நீக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

  இதற்கிடையில், பணிக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என்ற நோட்டீசும் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 55 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்கள் தங்களது உடல் தகுதி குறித்த சான்றிதழ்களை நாளை (திங்கட்கிழமை) வழங்கவும் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். அவ்வாறு சான்றிதழ் வழங்காத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், அவர்களை வேலையில் இருந்து நீக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பரபரப்பு

  கர்நாடகத்தில் போக்குவரத்து ஊழியர்களின் தொடர் வேலை நிறுத்தத்தால் கர்நாடக அரசுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.20 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதாகவும், அரசு பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருப்பதால் சம்பள உயர்வு வழங்க முடியாது என்று கூறியுள்ளது.

  இதை பொருட்படுத்தாமல் தொடர் போராட்டத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் சிலர் போராட்டத்தை தூண்டுவதாவும், பணிக்கு செல்லும் ஊழியர்களை தடுத்ததாகவும் புகார்கள் வந்தன. இதனால் அத்தகைய ஊழியர்கள் முதற்கட்டமாக கர்நாடக அரசு பணி நீக்கம் செய்து உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதுபோல் பணியில் அலட்சியமாக இருந்த புகாரில் சிக்கிய ஊழியர்களும் பணி நீக்க நடவடிக்கைக்கு ஆளாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.

  இந்த சம்பவம் கர்நாடக போக்குவரத்து ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story