பிச்சை எடுப்பதை குற்றமாக்கும் சட்டம் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


பிச்சை எடுப்பதை குற்றமாக்கும் சட்டம் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 10 April 2021 10:19 PM GMT (Updated: 10 April 2021 10:19 PM GMT)

மும்பை, பஞ்சாப், அரியானா, பீகார் ஆகியவற்றில் கொண்டுவரப்பட்டுள்ள, பிச்சை எடுப்பதை குற்றமாக்கும் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

புதுடெல்லி, 

மீரட்டைச் சேர்ந்த விஷால் பாதக் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மும்பை, பஞ்சாப், அரியானா, பீகார் ஆகியவற்றில் கொண்டுவரப்பட்டுள்ள, பிச்சை எடுப்பதை குற்றமாக்கும் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர்.சுபாஷ் ரெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

கடந்த பிப்ரவரி 10-ந் தேதி விசாரணையின்போது மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள், பிச்சை எடுப்பதை குற்றமாக்கும் சட்டத்தை திரும்பப்பெற கோரிய மனு தொடர்பாக 6 வாரங்களுக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கும், மராட்டியம், பஞ்சாப், குஜராத், அரியானா மற்றும் பீகார் மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு, வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பிச்சை எடுப்பதை குற்றமாக்கும் சட்டத்தை திரும்பப்பெற கோரிய மனு தொடர்பாக பீகார் மாநிலம் மட்டுமே பதில் அளித்துள்ளது. மத்திய அரசும், மராட்டியம், பஞ்சாப், குஜராத், அரியானா மாநில அரசுகளும் 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

Next Story