அந்தமான் தீவுகளில் புதிதாக 14 பேருக்கு கொரோனா


அந்தமான் தீவுகளில் புதிதாக 14 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 11 April 2021 11:56 PM GMT (Updated: 11 April 2021 11:56 PM GMT)

தற்போது நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தாக்கம் உணரப்பட்டு வருகிறது.


போர்ட்பிளேயர், 

தற்போது நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தாக்கம் உணரப்பட்டு வருகிறது. அந்தமான் நிகோபர் தீவுகளிலும் அது பிரதிபலிக்கிறது. அங்கு புதிதாக 14 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. அதன்மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்து 175 ஆக அதிகரித்திருக்கிறது.

அந்தமான் நிகோபர் தீவுகளில் சமீப நாட்களில் சட்டென்று கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள போதிலும், பலி எண்ணிக்கை 62 ஆகவே நிலைபெற்றுள்ளது. அத்தீவுகளில் கடந்த 100 நாட்களில் கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை.

கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதில் அந்தமான் நிகோபர் யூனியன் பிரதேச நிர்வாகம் தீவிர கவனம் செலுத்திவருகிறது. கொரோனா பாதிப்பை தேடுவது, பரிசோதிப்பது, சிகிச்சை அளிப்பது என்ற அணுகுமுறையைப் பின்பற்றுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீப கால கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் அந்தமான் சுற்றுலாத்துறை பாதிக்கப்படவில்லை.

ஆனால், கொல்கத்தா மற்றும் சென்னையில் இருந்து விமானம் மற்றும் கப்பல் மூலம் வருவோர், தங்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழைக் காட்டியபின்பே தீவுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

Next Story