கொரோனா விதிகளை மறந்து உல்லாச விருந்தில் பங்கேற்ற இளம்பெண்கள் உள்பட 150 பேர் கைது - போலீசார் அதிரடி


கொரோனா விதிகளை மறந்து உல்லாச விருந்தில் பங்கேற்ற இளம்பெண்கள் உள்பட 150 பேர் கைது - போலீசார் அதிரடி
x
தினத்தந்தி 12 April 2021 12:53 AM GMT (Updated: 12 April 2021 12:53 AM GMT)

ஆலூரில், கொரோனா விதிகளை மறந்து உல்லாச விருந்தில் பங்கேற்ற இளம்பெண்கள் உள்பட 150 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

ஹாசன்,

ஹாசன் மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் வைரஸ் பரவலை தடுக்க சுகாதார துறையும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் அந்த கட்டுப்பாடுகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஹாசன் மாவட்டம் ஆலூர் தாலுகா ஹலவடே கிராமத்தில் அமைந்திருக்கும் ஒரு பண்ணை தோட்டத்தில் ஆடல்-பாடல், மதுபானம் மற்றும் போதைப்பொருட்களுடன் உல்லாச விருந்து நிகழ்ச்சி நடப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாஸ் கவுடாவுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாஸ் கவுடா தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு கொரோனா விதிகள் எதையும் கடைப்பிடிக்காமல் உல்லாச விருந்தில் பங்கேற்று போதையில் ஆடிப்பாடி மகிழ்ந்து கொண்டிருந்த இளம்பெண்கள் உள்பட 150 பேரை பிடித்து கைது செய்தனர். அவர்கள் அனைவரின் மீதும் ஆலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story