அசுர வேகத்தில் பரவும் கொரோனா இந்திய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி


அசுர வேகத்தில் பரவும் கொரோனா  இந்திய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி
x
தினத்தந்தி 12 April 2021 5:32 AM GMT (Updated: 12 April 2021 5:42 AM GMT)

கொரோனா பாதிப்பு உயர்வால் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 1,194 புள்ளிகள் சரிந்தன.

மும்பை,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.   இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,68,912 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,35,27,717 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், தொற்றுக்கு 904 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால் மொத்த பலி எண்ணிக்கை 1,70,179 ஆக உயர்ந்துள்ளது.  12.01 லட்சம் பேர் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.  இவற்றில் மராட்டியம் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகிறது.

கடந்த 24 மணிநேரத்தில் 63,294 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  349 பேர் உயிரிழந்து உள்ளனர்.  அதனால் முழு ஊரடங்கை அமல்படுத்துவது பற்றி மராட்டிய அரசு இந்த வாரம் முடிவு செய்யும் என கூறப்படுகிறது.

நாட்டில் கொரோனா பாதிப்பு உயர்வால் மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 1,194 புள்ளிகள் சரிந்து 48,397 என்ற அளவில் இருந்தது.  இதேபோன்று, தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 377 புள்ளிகள் சரிவடைந்து 14,457 புள்ளிகளாக காணப்பட்டது.  நாட்டின் இரண்டு பங்கு சந்தைகளும் அதிக சரிவுடனேயே காணப்பட்டன.

Next Story