தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின் பேரிலேயே பணிபுரிகிறோம்; சி.ஆர்.பி.எப். இயக்குனர் ஜெனரல் பேட்டி


தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின் பேரிலேயே பணிபுரிகிறோம்; சி.ஆர்.பி.எப். இயக்குனர் ஜெனரல் பேட்டி
x
தினத்தந்தி 12 April 2021 9:41 AM GMT (Updated: 12 April 2021 9:41 AM GMT)

தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின் பேரிலேயே துணை ராணுவ படையினர் பணிபுரிகின்றனர் என சி.ஆர்.பி.எப். இயக்குனர் ஜெனரல் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

மேற்கு வங்காள சட்டசபைக்கான 4வது கட்ட தேர்தல் கடந்த 10ந்தேதி நடந்து முடிந்தது.  இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் கூச் பெஹாரில் தேர்தலின்பொழுது, திடீரென துப்பாக்கி சூடு நடந்துள்ளது.  இந்த சம்பவத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர்.  4 பேர் காயமடைந்தனர்.  அவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

இதுபற்றி மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறும்பொழுது, கூச் பெஹாரில் உள்ள சீத்தல்குச்சி பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.  மற்றொரு மரணமும் காலையில் நடந்து உள்ளது.

சி.ஆர்.பி.எப். எனது எதிரி அல்ல.  ஆனால், உள்துறை மந்திரியின் அறிவுறுத்தலால் சில சதி திட்டங்கள் நடந்தேறி வருகின்றன.  அதற்கு இந்த சம்பவம் சாட்சி என கூறினார்.

வரிசையில் நின்ற வாக்காளர்களை சி.ஆர்.பி.எப். சுட்டு கொன்றுள்ளது.  அவர்களுக்கு இதுபோன்ற தைரியம் எங்கிருந்து வந்தது?  பா.ஜ.க.வுக்கு தோல்வி அடைந்து இருக்கிறோம் என தெரிந்து இருக்கிறது.  அதனால் அவர்கள் வாக்காளர்கள் மற்றும் தொண்டர்களை கொன்று வருகின்றனர் என குற்றச்சாட்டாகவும் கூறினார்.

ஆனால், மேற்கு வங்காளத்தில் துப்பாக்கி சூடு நடந்த பூத்தில் எங்களுடைய வீரர்கள் யாரும் பணியில் ஈடுபடுத்தப்படவும் இல்லை.  அந்த சம்பவத்துடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்து கொள்கிறோம் என சி.ஆர்.பி.எப். பதிலளித்திருந்தது.

பிரதமர் மோடி இன்று வர்தமான் நகரில் நடந்த பொது கூட்டத்தில் பேசும்பொழுது, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுடன், மத்திய படைகளை அவமதிக்க வேண்டாம் என்று மம்தா பானர்ஜிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த நிலையில், மத்திய மந்திரி அமித்ஷாவின் அறிவுரையின்படியே மத்திய படைகள் செயல்படுகின்றன என்ற மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டுகள் பற்றி சி.ஆர்.பி.எப். இயக்குனர் ஜெனரல் குல்தீப் சிங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்து செய்தியாளர்களிடம் பேசிய சிங், அரசியல் கட்சிகள் கூறுவதற்கு நான் பதிலளிக்கமாட்டேன்.  ஆனால், தேர்தல் ஆணையத்தின் பொறுப்புக்கு கீழ் உள்ள அனைத்து துணை ராணுவ படையினரும், தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின் பேரிலேயே பணிபுரிகின்றனர் என நான் உத்தரவாதம் அளிக்க முடியும் என கூறியுள்ளார்.

Next Story