6-வது நாளாக நீடித்த அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம்


6-வது நாளாக நீடித்த அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 12 April 2021 10:11 PM GMT (Updated: 12 April 2021 10:11 PM GMT)

பஸ் சேவை முடங்கியதால் யுகாதி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல முடியாமல் மக்கள் பெரிதும் தவிப்புக்கு ஆளாயினர்.

பெங்களூரு: பஸ் சேவை முடங்கியதால் யுகாதி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல முடியாமல் மக்கள் பெரிதும் தவிப்புக்கு ஆளாயினர்.

பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை

6-வது ஊதிய குழு பரிந்துரையின்படி சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் கடந்த 7-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா, போக்குவரத்து கழகங்கள் நிதி நெருக்கடியில் இருப்பதால் எக்காரணம் கொண்டும் 6-வது ஊதிய குழுப்படி சம்பள உயர்வு வழங்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். இதுவரை போக்குவரத்து ஊழியர்கள் சங்க பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு கூட அழைக்கவில்லை. இந்த நிலையில் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் நேற்று 6-வது நாளாக நீடித்தது.

நேற்று சில ஊழியர்கள் பணிக்கு ஆஜராயினர். அவர்களை பயன்படுத்தி 3,000 பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் தலைநகர் பெங்களூருவில் அதிக எண்ணிக்கையில் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. புறநகர் பகுதிகளுக்கும் தனியார் பஸ்கள் இயங்கின. ஆனாலும் மிக குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.

வேலை நிறுத்தம்

தனியார் டிரைவர்கள் மூலம் அரசு பஸ்களை இயக்குவதாகும், உரிய பயிற்சி இல்லாதவர்கள் மூலம் பஸ்களை இயக்குவதால் விபத்துகள் நடப்பதாகவும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதை கே.எஸ்.ஆர்.டி.சி. நிர்வாகம் மறுத்துள்ளது.

பஸ் சேவை முடங்கியதால் யுகாதி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்வதில் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். தனியார் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் கொடுத்து சென்றனர். அதிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் இப்போதைக்கு முடிவடைவதாக தெரியவில்லை. ஏனென்றால் பேச்சுவார்த்தை நடத்த அரசு ஆர்வம் காட்டவில்லை.

சம்பளம் வழங்கவில்லை

சம்பள உயர்வு வழங்காமல் வேலை நிறுத்தத்தை கைவிடும் மனநிலையில் போக்குவரத்து ஊழியர்கள் இல்லை. மாநில அரசும், போக்குவரத்து ஊழியர்களும் தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் சாமானிய மக்கள் பஸ் போக்குவரத்து இல்லாமல் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர். மக்கள் படும் கஷ்டம் குறித்து அரசு கொஞ்சமாவது யோசிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

பணிக்கு ஆஜரான ஊழியர்களுக்கு மார்ச் மாத சம்பளத்தை அரசு வழங்கி வருகிறது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு இன்னும் மார்ச் மாத சம்பளத்தை அரசு வழங்கவில்லை. இதற்கிடையே பணிக்கு ஆஜராகாத ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் பணியை அரசு தொடங்கியுள்ளது.

Next Story