ஆடுகளத்தை விட்டு வெளியேறும்படி மக்கள் சொல்லி விட்டனர் மம்தா பானர்ஜி ‘கிளீன் போல்டு’ ஆகிவிட்டார் - பிரதமர் மோடி வர்ணனை


ஆடுகளத்தை விட்டு வெளியேறும்படி மக்கள் சொல்லி விட்டனர் மம்தா பானர்ஜி ‘கிளீன் போல்டு’ ஆகிவிட்டார் - பிரதமர் மோடி வர்ணனை
x
தினத்தந்தி 13 April 2021 5:21 AM GMT (Updated: 13 April 2021 5:21 AM GMT)

மேற்கு வங்காள தேர்தலில் மம்தா பானர்ஜி ‘கிளீன் போல்டு’ ஆகிவிட்டார். அவரை களத்தை விட்டு வெளியேறுமாறு மக்கள் சொல்லி விட்டனர் என்று பிரதமர் மோடி கூறினார்.

கொல்கத்தா, 

மேற்கு வங்காள சட்டசபைக்கு 4 கட்ட தேர்தல்கள் முடிந்தநிலையில், இன்னும் 4 கட்ட தேர்தல்கள் மீதி உள்ளன. இந்தநிலையில், பர்தாமன் என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

கூட்டத்தில் அவர் பேசுகையில், சட்டசபை தேர்தலை கிரிக்கெட் விளையாட்டுடன் ஒப்பிட்டு வர்ணனை செய்தார்.

அவர் பேசியதாவது:-

மேற்கு வங்காளத்தில் நடந்து முடிந்த 4 கட்ட தேர்தல்களில் மக்கள் ஏராளமானோர் ‘போர்’, ‘சிக்ஸ்’களை அடித்துள்ளனர். பா.ஜனதா ஏற்கனவே ‘செஞ்சுரி’ (100 தொகுதியில் வெற்றி) எடுத்து விட்டது. அதன்மூலம் பாதி ஆட்டத்திலேயே திரிணாமுல் காங்கிரசை துடைத்து எறிந்து விட்டது.

நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜியை மக்கள் ‘கிளீன் போல்டு’ ஆக்கி விட்டனர். அவரது மொத்த அணியையும் ஆடுகளத்தை விட்டு வெளியேறுமாறு கூறி விட்டனர்.
மம்தா பானர்ஜி, ‘மா மதி, மனுஷ்’ (தாய்மார்கள், தாய்மண், மக்கள்) என்ற கோஷத்தை எழுப்பி வருகிறார். ஆனால், உண்மையில், தாய்மார்களை துன்புறுத்துதல், தாய்மண்ணை கொள்ளையடித்தல், மக்களை ரத்தக்களறி ஆக்குதல் என்று செயல்பட்டு வருகிறார்.

தேர்தல் பணியில் உள்ள மத்திய படையினரை தாக்குமாறு மக்களை தூண்டி விடுகிறார். அவரது கொள்கைகளால் எண்ணற்ற தாய்மார்களின் குழந்தைகள் வாழ்வு சீரழிந்துள்ளது.

மம்தா பானர்ஜிக்கு நெருக்கமான ஒரு தலைவர், பட்டியல் இனத்தவரை ‘பிச்சைக்காரர்கள்’ என்று கூறியுள்ளார். மம்தா தன்னை ‘வங்கத்து புலி’ என்று சொல்லிக் கொள்பவர். எனவே, அவரது அனுமதி இல்லாமல் அந்த தலைவர் இப்படி பேசியிருக்க முடியுமா?

இந்த கருத்துகள், அம்பேத்கரின் ஆன்மாவை காயப்படுத்தி உள்ளன. இதற்கு வருத்தம் தெரிவிக்கக்கூட மம்தா முன்வரவில்லை. பட்டியல் இனத்தினரை அவமதித்ததன் மூலம் அவர் மிகப்பெரிய பாவத்தையும், தவறையும் செய்துள்ளார்.

மக்களை பிளவுபடுத்துவதுதான் மம்தாவின் வேலை. ஆனால், நான் மக்களை ஒன்றுபடுத்தி, அவர்களுக்கு சேவை ஆற்றுகிறேன்.

மேற்கு வங்காளத்தில் ஆட்சியை இழந்த காங்கிரசால் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாது என்று மம்தாவுக்கு தெரியும். இடதுசாரிகளும் மீண்டும் ஆட்சியை பிடிக்க இயலாது. அதுபோல், இப்போது ஆட்சியை இழக்கும் மம்தாவால் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாது.

இவ்வாறு மோடி பேசினார்.

Next Story