தேர்தல் ஆணையத்தின் தடை உத்தரவுக்கு எதிர்ப்பு; முதல் மந்திரி மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம்


தேர்தல் ஆணையத்தின் தடை உத்தரவுக்கு எதிர்ப்பு; முதல் மந்திரி மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 13 April 2021 7:08 AM GMT (Updated: 13 April 2021 7:08 AM GMT)

தேர்தல் ஆணையத்தின் 24 மணிநேர பிரசார தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல் மந்திரி மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.  கடந்த மார்ச் 27ந்தேதி முதற்கட்ட தேர்தல் நடந்தது.  அடுத்த கட்ட தேர்தல் வருகிற 17ந்தேதி நடைபெற உள்ளது.

தேர்தல் நடந்துவரும் சூழலில், முதல் மந்திரி மம்தா பானர்ஜி தேர்தல் கமிஷன், மத்திய படைகளை தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். உள்துறை மந்திரி அமித்ஷாவை கடுமையாக விமர்சித்து வரும் அவர், அமித்ஷாவின் கட்டளைப்படி செயல்படுவதாக மத்திய படைகள் மீதும் குற்றச்சாட்டு கூறி வருகிறார்.  இதற்கு தேர்தல் கமிஷனும் கண்டனம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, சர்ச்சைக்குரிய வகையில் மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக தெரிகிறது.  இது தொடர்பாக மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி தேர்தல் கமிஷனில் புகார் செய்தார்.

இதைத்தொடர்ந்து மத்திய படைகளுக்கு எதிரான மம்தாவின் கருத்துகள் மற்றும் இந்த வகுப்புவாத கருத்துகளுக்காக மம்தா பானர்ஜிக்கு ஒருநாள் (24 மணி நேரம்) பிரசாரம் செய்ய தேர்தல் கமிஷன் நேற்று அதிரடியாக தடை விதித்தது.

இந்த தடை நேற்று இரவு 8 மணி முதல் இன்று இரவு 8 மணி வரை அமலில் இருக்கும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது.

மம்தாவின் இந்த கருத்துகள் மாநிலத்தில் தீவிரமான சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் எனக்கூறி கடும் கண்டனம் தெரிவித்துள்ள தேர்தல் கமிஷன், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நாட்களில் பொதுவெளியில் பேசும்போது இதுபோன்ற கருத்துகளை தவிர்க்குமாறும் அறிவுறுத்தியது.

இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் 24 மணிநேர பிரசார தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தா நகரில் காந்தி மூர்த்தி பகுதியில், இன்று மதியம் 12 மணியில் இருந்து முதல் மந்திரி மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

Next Story