பிரச்சினை திட்டமிடலில்தான் உள்ளது: கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை; மத்திய அரசு அறிவிப்பு


பிரச்சினை திட்டமிடலில்தான் உள்ளது: கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை; மத்திய அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 13 April 2021 10:40 PM GMT (Updated: 13 April 2021 10:40 PM GMT)

கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை, பிரச்சினை திட்டமிடலில் தான் இருக்கிறது என்று மத்திய அரசு கூறுகிறது.

எத்தனை தடுப்பூசிகள் வினியோகம்?
கொரோனாவின் இரண்டாவது அலை, இந்தியாவில் வேகம் காட்டி வருகிற சூழலில், மராட்டியம் உள்ளிட்ட சில மாநிங்களில் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு விளக்கம் அளிக்கிற விதத்தில் மத்திய அரசின் சார்பில் சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 
அப்போது அவர் கூறியதாவது:-

இதுவரை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 13 கோடியே 10 லட்சத்து 90 ஆயிரத்து 370 டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 11 கோடியே 43 லட்சத்து 69 ஆயிரத்து 677 டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பயன்படுத்தாமல் வீணான தடுப்பூசிகளும் இதில் அடக்கம்.

தட்டுப்பாடு இல்லை...
இன்று (நேற்று) காலை 11 மணி நிலவரப்படி, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடம் பயன்படுத்தாமல் இருப்பில் உள்ள தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 1 கோடியே 67 லட்சத்து 20 ஆயிரத்து 693 ஆகும். இப்போது இருந்து இந்த மாதம் இறுதி வரையில் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 2 கோடியே 1 லட்சத்து 22 ஆயிரத்து 960 தடுப்பூசிகள் வினியோகிக்கப் படுகின்றன.இது தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை, பிரச்சினை சிறப்பான திட்டமிடல் இல்லை என்பதைத்தான் காட்டுகிறது.நாங்கள் பெரிய மாநிலங்களுக்கு 4 நாட்களுக்கு ஒரு முறை தடுப்பூசி வழங்குகிறோம். 5-வது 
நாளில் வினியோகத்தை நிரப்புகிறோம். சிறிய மாநிலங்களுக்கு 7-8 நாட்களுக்கு ஒரு முறை தடுப்பூசி வழங்குகிறோம். 7-வது அல்லது 8-வது நாளில் வினியோகத்தை நிரப்புகிறோம்.

கேரளாவில் வீண் இல்லை
ஒவ்வொரு மாநிலமும், பயன்படுத்தப்படாத எத்தனை தடுப்பூசிகள் குளிரூட்டப்பட்ட கிடங்குகளில் இருப்பில் உள்ளன என்பதை கண்டறிய வேண்டும்.எந்த மாநிலத்திலாவது ஒரு மாவட்டத்தில் தடுப்பூசிகள் கூடுதலாக பயன்படுத்தப்படலாம். மற்றொன்றில் குறைவாக பயன்படுத்தப்படலாம். இப்படிப்பட்ட சூழலில், அதிகமாக பயன்படுத்துகிற மாவட்டத்துக்கு எங்கிருந்து தடுப்பூசிகளை பெற்று பயன்படுத்தலாம் என மாநில அரசுகள் கண்டறிய வேண்டும்.கேரள மாநிலத்தில்தான் தடுப்பூசி வீண் ஆவதில்லை. மற்ற மாநிலங்களில் 8 அல்லது 9 சதவீதம் வீண் ஆகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story