மராட்டியத்தில் சோதனை செய்யப்பட்ட மாதிரிகளில் 61% அதி தீவிர கொரோனா- ஆய்வில் தகவல்


மராட்டியத்தில் சோதனை செய்யப்பட்ட மாதிரிகளில்  61%   அதி தீவிர கொரோனா-  ஆய்வில் தகவல்
x
தினத்தந்தி 14 April 2021 8:22 AM GMT (Updated: 14 April 2021 8:22 AM GMT)

மராட்டியத்தில் சோதனை செய்யப்பட்ட மாதிரிகளில் 61 சதவீதம் அதி தீவிர கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

மும்பை

மராட்டியத்தில் 2-வது கொரோனா அலை வேகமாக பரவி வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் தொற்று பாதிப்பு மீண்டும் 60 ஆயிரத்தை தாண்டியது. நேற்று முன்தினம் ஓரளவு பாதிப்பு குறைந்து இருந்த நிலையில் மாநிலத்தில் புதிதாக 60 ஆயிரத்து 212 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 19 ஆயிரத்து 208 ஆக உயர்ந்து உள்ளது.

இதில் 28 லட்சத்து 66 ஆயிரத்து 97 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 5 லட்சத்து 93 ஆயிரத்து 42 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதேபோல மேலும் 281 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதனால் தொற்றுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 58 ஆயிரத்து 526 ஆக அதிகரித்து உள்ளது. மாநிலத்தில் தொற்று பாதித்தவர்களில் 81.44 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளனர். 1.66 சதவீதம் பேர் உயிரிழந்து உள்ளனர்.

 மராட்டிய மாநிலத்தில்  கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் இன்று முதல் ஏப்ரல் 30 வரை 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புனேவிலுள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி வெளியிட்டுள்ள தகவலின் படி, ஜனவரி முதல் மார்ச் வரையிலான கால இடைவெளியில் பரிசோதனை செய்யப்பட்ட 361 மாதிரிகளில் 220 மாதிரிகளுக்கு அதிதீவிர கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பரிசோதனைகளில்  61 சதவீத அதி தீவிர கொரோனா இருப்பது தெரியவந்து உள்ளது.

பிப்ரவரியில் அகோலா, அமராவதி, பண்டாரா, ஹிங்கோலி, கோண்டியா, சந்திரபூர், நாக்பூர், புனே, வர்தா மற்றும் யவத்மால் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாதிரிகளில் அதி தீவிர கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. 

மார்ச் மாதத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் அவுரங்காபாத், மும்பை, ஜல்னா, பால்கர், நந்தேடில் இருந்து வரிசைப்படுத்தப்பட்ட மாதிரிகளில், இரண்டு முதல் 14 மாதிரிகள் இந்த மாறுபாட்டைக் கொண்டு இருந்தன.

மார்ச் 24 அன்று, மராட்டியத்தில்  15-20 சதவீத  மாதிரிகளில்" அதிதீவிர கொரோனாவை கண்டு பிடித்து இருந்ததாக் மத்திய அரசு அறிவித்து இருந்தது.

மராட்டியத்தில் பரவி வரும் இரண்டாவது  கொரோனா அலையில் அதி தீவிர கொரோனா பாதிப்பு பங்கை நிராகரிக்க முடியாது என்று மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். மாநிலம் ஒவ்வொரு நாளும் 50,000 க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகளை  பதிவு செய்து வருகிறது, மேலும் 5.64 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். 

மராட்டிய மாநிலத்தில்  மீண்டும் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால், அதிதீவிர கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும், அதிதீவிர கொரோனாவை கண்டறிய சிறப்பு வழிகாட்டு நெறிமுறைகள் ஏதும் தரப்படவில்லை என்றும், பழைய முறையே பின்பற்றப்பட்டு வருவதாகவும் மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Next Story