தேர்தல் பிரசாரத்திற்காக பாஜக வெளியாட்களை கொண்டுவந்து கொரோனா பரவலை அதிகரித்துவிட்டது - மம்தா குற்றச்சாட்டு


தேர்தல் பிரசாரத்திற்காக பாஜக வெளியாட்களை கொண்டுவந்து கொரோனா பரவலை அதிகரித்துவிட்டது - மம்தா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 14 April 2021 10:33 PM GMT (Updated: 14 April 2021 10:33 PM GMT)

மேற்குவங்காளத்தில் தேர்தல் பிரசாரத்திற்காக பாஜக வெளியாட்களை கொண்டுவந்து கொரோனா பரவலை அதிகரித்துவிட்டதாக மம்தா பானர்ஜி குற்றச்சாட்டியுள்ளார்.

கொல்கத்தா,

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது. எஞ்சிய 4 கட்டங்களும் முறையே ஏப்ரல் 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் 44 தொகுதிகளுக்கு 5-ம் கட்ட தேர்தல் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது.

இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக-வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேவேளை இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் அப்பாஸ் சித்திக்யூ என்பவரின் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பாஜகவை சேர்ந்த வேறு மாநில தலைவர்கள் மேற்குவங்காளத்தில் நட்சத்திர பேச்சாளர்களாக பிரசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மேற்குவங்காள முதல்மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அம்மாநிலத்தின் ஜல்பய்ஹூரி பகுதியில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய மம்தா,  

கொரோனா பரவல் தொடங்கியபோது நரேந்திரமோடியும், அமித்ஷாவும் மேற்குவங்காளத்திற்கு வரவில்லை. ஆனால், தற்போது தேர்தல் பிரசாரத்திற்காக பாஜக தலைவர்கள் வெளியாட்களை மேற்குவங்காளத்திற்கு கொண்டுவந்து கொரோனா பரவலை அதிகரித்துவிட்டது. மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். ஆனால், அவர்கள் (பாஜக) அந்த முயற்சியை கடினமாக்குகின்றனர்’ என்றார்.

தேர்தல் பிரசாரத்திற்கு 24 மணி நேரம் தடை விதிக்கப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்த மம்தா பானர்ஜி, இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் அனைவரும் இணைந்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்பது தவறா? எல்லா தேர்தல் பிரசார கூட்டத்தின்போதும் பிரதமர் மோடி என்னை கிண்டல் செய்வது தவறு இல்லையா? அவர் ஏன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தடை விதிக்கப்படவில்லை?’ என்றார்.

Next Story