ராஜஸ்தானில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்


ராஜஸ்தானில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்
x
தினத்தந்தி 14 April 2021 11:33 PM GMT (Updated: 14 April 2021 11:33 PM GMT)

ராஜஸ்தானில் உள்ள அனைத்து நகரங்களிலும் நாளை முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

ஜெய்ப்பூர்,

இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. வைரஸ் பரவலை தடுக்கும் வ்கையில் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அம்மாநிலத்தில் உள்ள அனைத்து நகரங்களிலும் நாளை முதல் மாலை 6 மணி தொடங்கி காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இரவு நேர ஊரடங்கு நாளை முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கின்போது சந்தைகள், வணிக வளாகங்கள் மாலை 5 மணிக்கே மூடப்பட வேண்டும் எனவும், அப்போது தான் பொதுமக்கள் 6 மணிக்குள் வீடு போய் சேர அவகாசம் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்கள் 4 மணிவரை திறந்து வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், நிறுவனங்கள், மருந்தகங்கள் திறந்து வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. பயிற்சி மையங்கள், நூலகங்கள் தொடர்ந்து மூடியிருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 
 
திரையரங்குகள், நீச்சல் குளங்கள் தொடர்ந்து மூடியிருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், உணவகங்களில் 50 சதவிகித வாடிக்கையாளர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளில் 50 சதவிகித இருக்கை வசதியை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. 

ராஜஸ்தானில் நேற்று ஒரேநாளில் 6 ஆயிரத்து 200 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 81 ஆயிரத்து 292 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 44 ஆயிரத்து 905 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கொரோனா தாக்குதலுக்கு ராஜஸ்தானில் நேற்று மட்டும் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், அம்மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 8 ஆக அதிகரித்துள்ளது.

Next Story