நமது போராட்டம் அரசியல் ரீதியிலானது மட்டுமல்ல, கருத்தியல் ரீதியிலானது - மேற்குவங்காளத்தில் ராகுல்காந்தி பேச்சு


நமது போராட்டம் அரசியல் ரீதியிலானது மட்டுமல்ல, கருத்தியல் ரீதியிலானது - மேற்குவங்காளத்தில் ராகுல்காந்தி பேச்சு
x
தினத்தந்தி 15 April 2021 1:17 AM GMT (Updated: 15 April 2021 1:17 AM GMT)

நமது போராட்டம் அரசியல் ரீதியிலானது மட்டுமல்ல கருத்தியல் ரீதியிலானது என்று மேற்குவங்காளத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது. எஞ்சிய 4 கட்டங்களும் முறையே ஏப்ரல் 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் 44 தொகுதிகளுக்கு 5-ம் கட்ட தேர்தல் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது.

இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக-வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேவேளை இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி நேற்று மேற்குவங்காளத்தில் தனது முதல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அம்மாநிலத்தின் தெற்கு டினஜ்பூர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி கூறியதாவது,

நீங்கள் திரிணாமுல் காங்கிரசுக்கு வாய்ப்பு வழங்கினீர்கள் ஆனால், அவர்கள் தோல்வியடைந்துவிட்டது. மம்தா சாலைகள், கல்லூரிகள் அமைத்தாரா? வேலை தேடி மக்கள் வெளிமாநிலங்களுக்கு செல்கின்றனர். வேலைவாய்ப்பு பெற லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ள ஒரே மாநிலம் மேற்குவங்காளம் தான். 

நாட்டில் காங்கிரஸ் இல்லாத நிலையை உருவாக்குவோம் என்று பாஜக சொல்கிறதே தவிர திரிணாமுல் காங்கிரஸ் இல்லாத நிலையை உருவாக்குவோம் என்று கூறவில்லை. நாங்கள் ஒருபோதும் பாஜக, ஆர்.எஸ்.எஸ். உடன் கூட்டணி வைத்ததில்லை.

நமது போராட்டம் அரசியல் ரீதியிலானது மட்டுமல்ல, கருத்தியல் ரீதியிலானதும் ஆகும். ஆனால், மம்தா பானர்ஜிக்கு இது அரசியல் ரீதியிலான போராட்டம் மட்டுமே. மம்தா பானர்ஜியும், பாஜவும் ஏற்கனவே கூட்டணி வைத்துள்ளனர். 

மேற்குவங்காளத்தின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை பாஜக அழிக்க நினைக்கிறது. அவர்களுக்கு வெறுப்புணர்வு, வன்முறை, பிரிவு அரசியலை பரப்புவதை தவிர வேறு  ஒன்றும் தெரியாது. அனைத்து மாநிலங்களிலும் பாஜக ’தங்க வங்காளம்’ (பிரசார யுக்தி) போன்று கூறி வருகின்றனர். ஆனால், மத, ஜாதி, மொழி அடிப்படையில் மக்களை பிரிக்கும் வேலையை மட்டுமே அவர்கள்(பாஜக) செய்கின்றனர். அசாமில் அதைத்தான் செய்தனர். தமிழ்நாட்டில் அவர்களின் கூட்டணி கட்சியான அதிமுக-வுடன் இணைந்து அதை செய்ய முயற்சிக்கின்றனர்’ என்றார்.

Next Story