கொரோனாவை பரப்பிவிட்டு ஓடிவிட்டார்கள் குற்றம்சாட்டிய மம்தா பானர்ஜி ; பதிலடி கொடுத்த ஸ்மிருதி இரானி


கொரோனாவை பரப்பிவிட்டு ஓடிவிட்டார்கள் குற்றம்சாட்டிய  மம்தா பானர்ஜி ; பதிலடி கொடுத்த ஸ்மிருதி இரானி
x
தினத்தந்தி 15 April 2021 4:45 AM GMT (Updated: 15 April 2021 4:45 AM GMT)

கொரோனாவை பரப்பிவிட்டு ஓடிவிட்டார்கள் என மம்தா பானர்ஜி பா.ஜனதாவை குற்றம்சாட்டி உள்ளார். இதற்கு மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி பதிலடி கொடுத்து உள்ளார்.


புதுடெல்லி

மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து வருகின்றன. இதில் 4 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், 5-வது கட்ட வாக்குப்பதிவு வருகிற 17-ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.

இதில் வடக்கு 24 பா்கானாக்கள், டார்ஜிலிங், நாடியா, கலிம்போங், கிழக்கு பர்தமான் மற்றும் ஜல்பாய்குரி ஆகிய 6 மாவட்டங்களுக்கு உட்பட்ட 45 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.

இதில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜனதா, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் சார்பிலும், சுயேச்சையாகவும் மொத்தம் 319 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 39 பேர் பெண்கள் ஆவர்.

இவர்களின் அரசியல் எதிர்காலத்தை 1.12 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வருகிற 17-ந்தேதி நிர்ணயிக்கிறார்கள். இதற்காக 15,789 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

இந்த தொகுதிகளில் கடந்த சில வாரங்களாக அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நடந்து வந்தது. குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அதன் தலைவர் மம்தா பானர்ஜி மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.

இதைப்போல பா.ஜனதா சார்பில் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட பல்வேறு தேசிய தலைவர்களும், மாநில தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

மேலும் காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணி சார்பிலும் பல்வேறு தேசிய மற்றும் மாநில தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். இதனால் மாநிலத்தில் தேர்தல் களம் களைகட்டியிருந்தது.

மாநிலத்தில் 5-ம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரம் அனைத்தும் இன்று (வியாழக்கிழமை) மாலையில்தான் முடிவடைய வேண்டும். ஆனால் மேற்கு வங்காள தேர்தல் களம் தொடக்கம் முதலே ெபரும் பதற்றமும், பரபரப்பும் நிறைந்ததாகவே காணப்படுகிறது.

ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையே வெறுப்பு பேச்சுகள், ஆத்திரமூட்டும் உரைகள், தேர்தல் நடத்தை விதிமீறும் சம்பவங்கள் என பல்வேறு விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இதனால் தலைவர்களின் பிரசாரத்துக்கு தடை விதிக்கும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன.

எனவே 5-ம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரத்தை ஒருநாள் முன்கூட்டியே முடிக்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. குறிப்பாக பிரசாரத்துக்கும், வாக்குப்பதிவுக்கும் இடையேயான இடைவெளியை மேலும் 24 மணி நேரம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி அங்கு 5-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் அனைத்தும் நேற்று மாலையுடன் முடிவடைந்தது.

வடக்கு பெங்காலின் ஜல்பாய்குரி பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர்  பிரதீப் பர்மாவை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்தார். ஆனால், பிரதீப் பிரச்சார மேடையில் இல்லை. அவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் உள்ளார்.

பிரசாரத்தில் அவர் பேசும் போது கூறியதாவது:- 

மேற்கு வங்காளத்தில் 4 கட்டமாக 135 தொகுதிகளில் நடந்த தேர்தல்களில் பா.ஜனதா ஏற்கனவே 100 தொகுதிகளில் வெற்றி பெற்று விட்டதாக பிரதமர் மோடி கூறியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. 8 கட்ட தேர்தல்கள் முடிந்த பிறகும் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் வெறும் 70 தொகுதிகளில் கூட பா.ஜனதா வெற்றி பெறாது.

 மாநிலத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தது. இப்போது மீண்டும் கொரோனா பரவுகிறது. யாருக்கு வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தொற்று ஏற்படலாம்.

கடந்த முறை கொரோனா பரவல் ஏற்பட்டபோது நீங்கள் அனைவரும் எங்கிருந்தீர்கள். தேர்தல் அறிவித்தவுடன் பிரச்சாரத்துக்காக வெளியிலிருந்து ஆட்களைக் கூட்டிவந்துவிட்டு, கொரோனாவைப் பரப்பிவிட்டு ஓடிவிட்டீர்கள்.

அவர்கள் போகட்டும். மக்களே நீங்கள் எங்களுக்கு வாக்களியுங்கள்.

இந்திய அரசாங்கம் தடுப்பூசியை எல்லா மக்களுக்கும் சரியான நேரத்தில் போட்டிருந்தால் இன்று நாட்டில் இரண்டாவது அலை கரோனா பரவல் ஏற்பட்டிருக்காது" என்று கூறினார்.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, "மம்தாவை பிரதமர் தீதீ (வங்க மொழியில் அக்கா) என்றே அழைப்பார். ஆனால், அவரோ கொரோனா பரவலுக்கு மோடி, அமித் ஷாவைக் காரணமாகக் கூறியுள்ளார். இது எனக்கு அதிர்ச்சியளிக்கிறது" என்று கூறியுள்ளார்.

Next Story