மும்பை-டெல்லியில் நட்சத்திர ஓட்டல்கள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றம்


மும்பை-டெல்லியில் நட்சத்திர ஓட்டல்கள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றம்
x
தினத்தந்தி 15 April 2021 8:27 AM GMT (Updated: 15 April 2021 8:27 AM GMT)

மும்பை-டெல்லியில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலையடுத்து, அங்குள்ள 2 நட்சத்திர ஓட்டல்களை கொரோனா வைரஸ் சிகிச்சையளிக்கும் மையங்களாக மும்பை மாநகராட்சி மாற்றியுள்ளது.

மும்பை

நாட்டிலேயே கொரோனா வைரஸ் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலம் மராட்டிய மாநிலம் தான் . மராட்டியத்தில் 2-வது கொரோனா அலை வேகமாக பரவி வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் தொற்று பாதிப்பு மீண்டும் 60 ஆயிரத்தை தாண்டியது. நேற்று முன்தினம் ஓரளவு பாதிப்பு குறைந்து இருந்த நிலையில் மாநிலத்தில் புதிதாக 60 ஆயிரத்து 212 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 19 ஆயிரத்து 208 ஆக உயர்ந்து உள்ளது.

இதில் 28 லட்சத்து 66 ஆயிரத்து 97 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 5 லட்சத்து 93 ஆயிரத்து 42 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதேபோல மேலும் 281 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதனால் தொற்றுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 58 ஆயிரத்து 526 ஆக அதிகரித்து உள்ளது. மாநிலத்தில் தொற்று பாதித்தவர்களில் 81.44 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளனர். 1.66 சதவீதம் பேர் உயிரிழந்து உள்ளனர்.

மும்பையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலையடுத்து, அங்குள்ள 2 நட்சத்திர ஓட்டல்களை கொரோனா வைரஸ் சிகிச்சையளிக்கும் மையங்களாக மும்பை மாநகராட்சி மாற்றியுள்ளது.

மும்பையில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் 80 சதவீதம் நிரம்பிவிட்டன. ஐசியு மற்றும் வென்டிலேட்டர் வசதியுள்ள படுக்கைகளில் 98 சதவீதம் நிரம்பிவிட்டன.

இதையடுத்து, கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட, அதிகமான அறிகுறி இல்லாத நோயாளிகளைத் தங்கவைத்து சிகிச்சை அளிக்க இரு 5 நட்சத்திர ஓட்டல்களை மும்பை மாநகராட்சி பெற்றுள்ளது. இந்த இரு நட்சத்திர ஓட்டல்களையும், இரு தனியார் மருத்துவமனைகளின் கட்டுப்பாட்டில் விட்டுள்ளது.

கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ள இரு நட்சத்திர ஓட்டல்களிலும் இன்று (செவ்வாய்) முதல் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற உள்ளனர். அடுத்து வரும் நாட்களில் கூடுதலாக 2 ஆயிரம் படுக்கைகளை ஆக்ஸிஜன் வசதியுடன் உருவாக்கவும் மும்பை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக மும்பை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில், தனியார் மருத்துவமனைகளின் உதவியுடன் இரு நட்சத்திர ஓட்டல்களில் இன்று முதல் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார்கள். மிகவும் குறைவான அறிகுறிகள் இருக்கும் நோயாளிகள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

இரு தனியார் மருத்துவமனைகள் சார்பில் நடத்தப்படும் இந்த சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற ரூ.4 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படும், இதில் உணவு, தங்குமிடம் அனைத்தும் அடங்கும். மருந்துகள், மாத்திரைகள் உள்ளிட்ட செலவுகள் தனியாகக் கணக்கிடப்படும். ஒரு குடும்பத்தில் இருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால், ரூ.6 ஆயிரம் மதிப்பில் இருவர் தங்கும் அறைகளை எடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இது போல் டெல்லியிலும் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது புதன்கிழமை 17,282 புதிய கொரோனா பாதிப்புகள்  மற்றும் 104 இறப்புகளுடன் நகரத்தில் உச்சபட்சமாக பதிவாகியுள்ளது. படுக்கைகள் மற்றும் சிக்கலான பராமரிப்பு வசதிகளின் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக, தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுடன் ஒட்டல் மற்றும் விருந்து அரங்குகளைகொரோனா சிகிஅச்சி மையங்களாக மாற்ற  டெல்லி அரசு உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது.

Next Story