மராட்டிய சிறையில் 198 கைதிகள், 86 பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு


மராட்டிய சிறையில் 198 கைதிகள், 86 பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 15 April 2021 11:27 AM GMT (Updated: 15 April 2021 11:27 AM GMT)

மராட்டிய சிறையில் 198 கைதிகள் மற்றும் 86 பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

புனே,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,00,739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,40,74,564 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,038 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,73,123 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் சமீப நாட்களாக கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமடைந்து உள்ளது.  நாள்தோறும் பாதிப்படைவோரின் எண்ணிக்கை 1 லட்சம் எண்ணிக்கையை கடந்து வந்தது.  கடந்த வாரத்தில் 10 லட்சம் பாதிப்புகள் பதிவான சூழலில், இன்று 2 லட்சம் என்ற எண்ணிக்கையை ஒரே நாளில் கடந்து அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.

இதேபோன்று நாட்டில் அதிக பாதிப்புகளை சந்தித்த மாநிலங்களில் முதல் இடத்தில் உள்ள மராட்டியத்தில் உள்ள சிறைகளிலும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படுத்த தவறவில்லை.  மராட்டியத்தில் கொரோனா பாதிப்புக்கு 7 கைதிகள் மற்றும் 8 சிறை பணியாளர்கள் உயிரிழந்து உள்ளனர்.

இதுவரை 1,326 கைதிகள் மற்றும் 3,112 சிறை பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன.  இந்நிலையில், மராட்டிய சிறையில் உள்ள 198 கைதிகள் மற்றும் 86 பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என மாநில சிறை துறை இன்று தெரிவித்து உள்ளது.

Next Story