ரஷியாவில் இருந்து தடுப்பூசி இறக்குமதி பணிகள் தொடக்கம்; ஜூன் மாதத்துக்குள் இந்தியா வர வாய்ப்பு


ரஷியாவில் இருந்து தடுப்பூசி இறக்குமதி பணிகள் தொடக்கம்; ஜூன் மாதத்துக்குள் இந்தியா வர வாய்ப்பு
x
தினத்தந்தி 15 April 2021 2:29 PM GMT (Updated: 15 April 2021 2:29 PM GMT)

ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி ஜூன் மாதத்துக்குள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய வாய்ப்பிருப்பதாக டாக்டர் ரெட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரஷிய தடுப்பூசி

இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா தொற்றால் ஒருநாள் பாதிப்பு 2 லட்சத்தை தாண்டி உள்ளது. அதேநேரத்தில் கொரோனாவை தடுக்க தடுப்பூசிகள் போடும் நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் நேற்று காலை நிலவரப்படி 11 கோடியே 44 லட்சத்து 93 ஆயிரத்து 238 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் ரஷியாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்க இந்திய மருத்துவ தர கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இறக்குமதி பணிகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன.

இந்தியாவில் உற்பத்தி

இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க ஐதராபாத்தை சேர்ந்த டாக்டர் ரெட்டி நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது. முதல்கட்டமாக ரஷியாவில் இருந்து ஸ்புட்னிக்- வி தடுப்பூசியை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அந்த நிறுவனம், அடுத்த காலாண்டில் இருந்து தடுப்பூசி இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

முதலில் 25 கோடி தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாகவும் இந்த மாத இறுதியில் இருந்து ஜூன் மாதத்திற்குள் தடுப்பூசிகள் இந்தியா கொண்டு வரப்பட வாய்ப்புள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

விலை நிர்ணயம்

ஸ்புட்னிக் தடுப்பூசியின் ஒரு டோசின் விலையை ரூ.225 ஆக நிர்ணயிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், மத்திய அரசு வாங்கும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை பொறுத்து விலை மாறுபட வாய்ப்புள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்புட்னிக் தடுப்பூசியானது 91.6 சதவீதம் கொரோனாவை தடுக்கும் வலிமை கொண்டது. இந்தியாவில் ஆண்டுக்கு 850 மில்லியன் டோஸ்கள் தயாரிக்கப்பட உள்ளது.


Next Story