மேற்குவங்காள பாஜக தலைவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட 24 மணிநேரம் தடை - தேர்தல் ஆணையம் அதிரடி


மேற்குவங்காள பாஜக தலைவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட 24 மணிநேரம் தடை - தேர்தல் ஆணையம் அதிரடி
x
தினத்தந்தி 15 April 2021 6:30 PM GMT (Updated: 15 April 2021 6:30 PM GMT)

சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக எழுந்த புகாரையடுத்து மேற்குவங்காள பாஜக தலைவர் திலீப் கோஷ் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட 24 மணிநேரம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா,

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது. எஞ்சிய 4 கட்டங்களும் முறையே ஏப்ரல் 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் 44 தொகுதிகளுக்கு 5-ம் கட்ட தேர்தல் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது.

இத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் கூட்டணிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. அடுத்தகட்ட தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக, 4-ம் கட்ட தேர்தலின் போது அம்மாநிலத்தின் கூச் பெஹார் மாவட்டம் சீத்தல்குச்சி தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடி அருகே வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறை சம்பவத்தின் போது பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் (சிஐஎஸ்எஃப்) துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 பேர் உயிரிழந்தனர். 

இதற்கிடையில், தேர்தல் பிரசாரத்தின் போது பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில், மேற்குவங்காள பாஜக தலைவர் திலீப் கோஷ் கடந்த 11-ம் தேதி தெற்கு 24 பர்னாகஸ் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்றார். 

அப்போது பேசிய திலீப் கோஷ், கூச் பெஹார் மாவட்டம் சீத்தல்குச்சியில் துப்பாக்கி குண்டுகளை உடலில் வாங்கிய மோசமான நபர்கள் எங்கிருந்து வந்தார்கள்? இது போன்ற மோசமான நபர்கள் வங்காளத்தில் இருக்கக்கூடாது. இது தொடக்கம் தான். சி.ஐ.எஸ்.எப். வீரர்கள் துப்பாக்கிகளை காட்சிக்காக கொண்டுவந்துள்ளனர் என சிலர் நினைத்துக்கொண்டுள்ளனர். சட்டத்தை தங்கள் கையில் எடுக்கலாம் என்று யாரேனும் நினைத்தால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். வாக்குச்சாவடிகளில் மத்திய படையினர் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். அவர்களை யாரும் அச்சுறுத்த அனுமதிக்கப்படமாட்டார்கள். எனவே ஜாக்கிரதையாக இருங்கள்’ என்றார்.

பாஜக தலைவர் திலீப் கோஷின் பேச்சு மிகவும் அச்சுறுத்தும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் இருப்பதாக அவர் மீது திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

அந்த புகார் குறித்து ஆராய்ந்த தேர்தல் ஆணையம் திலீப் கோஷ் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை உறுதி செய்தனர். இந்நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக மேற்குவங்காள பாஜக தலைவர் 24 மணி நேரம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இந்த தடை இன்று(ஏப்ரல் 15) இரவு 7 மணி முதல் நாளை (ஏப்ரல் 16) இரவு 7 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்னர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததற்காக மேற்குவங்காள முதல்மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியும் 24 மணி நேரம் தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.    

Next Story