கடந்த 5 நாட்களில் கும்பமேளாவில் 1,700 பக்தர்களுக்கு கொரோனா தொற்று


கடந்த 5 நாட்களில் கும்பமேளாவில் 1,700 பக்தர்களுக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 16 April 2021 1:49 AM GMT (Updated: 16 April 2021 1:49 AM GMT)

கும்பமேளா பகுதியில் கடந்த 5 நாட்களில் மட்டும் 1,700 பக்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

டேராடூன்,

உத்தரகாண்டின் ஹரித்வாரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் கும்பமேளா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கும்பமேளா இந்த ஆண்டு நடந்து வருகிறது.

கொரோனா காரணமாக இந்த ஆண்டு கும்பமேளாவின் கால அளவு வெறும் ஒரு மாதமாக குறைக்கப்பட்டதுடன், பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. குறிப்பாக தொற்று இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம், சமூக இடைவெளி, முக கவசம் போன்ற விதிமுறைகள் பின்பற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

ஆனால் 670 ஹெக்டேர் பரப்பளவில் விரிந்து கிடக்கும் கும்பமேளா தலங்களில் லட்சக்கணக்கில் குவியும் பக்தர்களால் இந்த விதிமுறைகள் அனைத்தும் காற்றில் பறந்து விட்டன. எந்தவித விழிப்புணர்வோ, தொற்று குறித்த அச்சமோ இன்றி பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.

கும்பமேளாவின் மிக முக்கிய நாட்களான சோமவதி அமாவாசை (ஏப்ரல் 12-ந்தேதி), மேஷ் சங்கராந்தி (நேற்று முன்தினம்) ஆகிய 2 நாட்களில் மட்டும் சாமியார்கள், சாதுக்கள், பக்தர்கள் என 48½ லட்சத்துக்கு அதிகமானோர் புனித நீராடியுள்ளனர்.

இந்த கட்டுக்கடங்காத கூட்டத்தில் மக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்ய பாதுகாப்பு படையினராலும் முடியவில்லை. அத்துடன் பெரும்பாலான சாமியார்கள் மற்றும் சாதுக்கள், கொரோனா பரிசோதனைக்கும் மறுப்பு தெரிவித்தனர்.

இதன் விளைவாக அங்கு கொரோனா தொற்று அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது. அங்கு கடந்த 10 முதல் 14-ந்தேதி வரை நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் வரத்தொடங்கி இருக்கின்றன.

இதில் 1,701 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இன்னும் ஆயிரக்கணக்கானோரின் முடிவுகள் வர வேண்டியிருக்கின்றன. இதனால் தொற்று பாதித்தவர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இதைத்தொடர்ந்து கும்பமேளா நிகழ்விடங்களில் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்த சுகாதார அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

உலக அளவில் அதிகப்படியான பக்தர்கள் சங்கமிக்கும் புனித நிகழ்வுகளில் ஒன்றாக கும்பமேளா உள்ளது. கொரோனாவின் 2-வது அலை வீரியம் பெற்றுள்ள இந்த காலகட்டத்தில் நடைபெறும் இந்த நிகழ்வால் தொற்று அதிகரிக்கும் என்ற அச்சம் அனைவரிடமும் இருந்தது.

அவ்வாறு அனைத்து பிரிவினரும் அஞ்சியதுபோலவே கொரோனா பரப்பும் மையமாக ஹரித்வார் கும்பமேளா தளம் மாறியிருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Next Story