5 மாநில தேர்தல்: ரூ.1,001.44 கோடி பறிமுதல்; தமிழகம் முதலிடம்


5 மாநில தேர்தல்:  ரூ.1,001.44 கோடி பறிமுதல்; தமிழகம் முதலிடம்
x
தினத்தந்தி 16 April 2021 1:07 PM GMT (Updated: 16 April 2021 1:07 PM GMT)

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலில் மொத்தம் ரூ.1,001.44 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

அசாம், கேரளா, தமிழகம், புதுச்சேரி மற்றும் மேற்கு வங்காளம் என 5 மாநில சட்டசபை தேர்தல்களை நடத்துவது பற்றிய அறிவிப்பினை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.  இதுவரை மேற்கு வங்காளம் தவிர்த்து மற்ற 4 மாநிலங்களில் வாக்கு பதிவு நடந்து முடிந்துள்ளது.

மேற்கு வங்காளத்தில் இதுவரை 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளன.  5வது கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது.  இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலில் நேற்று (15ந்தேதி) வரை பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பிற பொருட்களை பற்றிய விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.

இதன்படி, மொத்தம் ரூ.1,001.44 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இவற்றில், தமிழகத்தில் ரொக்க மதிப்பில் ரூ.236.69 கோடியும், மதுபானம் (ரூ.5.27 கோடி), போதை பொருட்கள் (ரூ.2.22 கோடி), இலவச பொருட்கள் (ரூ.25.64 கோடி) மற்றும் விலைமதிப்பில்லா உலோகங்கள் (ரூ.176.46 கோடி) என மொத்தம் ரூ.446.28 கோடியளவுக்கு பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

இதனை தொடர்ந்து மேற்கு வங்காளம் (ரூ.300.11 கோடி) 2வது இடத்தில் உள்ளது.  அசாம் (ரூ.122.35 கோடி) 3வது இடத்திலும், கேரளா (ரூ.84.91 கோடி) 4வது இடத்திலும் மற்றும் புதுச்சேரி (ரூ.36.95 கோடி) 5வது இடத்திலும் உள்ளன.

Next Story