தொற்றின் தீவிரத்தன்மையையும், உயிரிழப்பையும் குறைக்கும் கொரோனா வருவதை தடுப்பூசி தடுக்காது - மருத்துவ நிபுணர்கள் கருத்து


தொற்றின் தீவிரத்தன்மையையும், உயிரிழப்பையும் குறைக்கும் கொரோனா வருவதை தடுப்பூசி தடுக்காது - மருத்துவ நிபுணர்கள் கருத்து
x
தினத்தந்தி 17 April 2021 2:05 AM GMT (Updated: 17 April 2021 2:05 AM GMT)

கொரோனா தடுப்பூசி, கொரோனா வருவதை தடுக்காது. ஆனால், தொற்றின் தீவிரத்தன்மையையும், உயிரிழப்பையும் குறைக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

புதுடெல்லி,

கொரோனா தடுப்பூசி 2 தவணை போட்ட பிறகும் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக பல மாநிலங்களில் தகவல் வெளியாகி உள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலர் கொரோனாவுக்கு பலியாகி விட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

இதனால், தடுப்பூசியின் தடுப்பாற்றல் குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.

இந்தநிலையில், இதற்கு நாடு முழுவதும் மருத்துவ நிபுணர்கள் பலர் விளக்கம் அளித்துள்ளனர்.

டெல்லி அப்பல்லோ ஆஸ்பத்திரியின் நுரையீரல் சிறப்பு மருத்துவர் அவ்தேஷ் பன்சால், மற்றொரு ஆஸ்பத்திரியின் நுரையீரல் சிறப்பு மருத்துவர் ரிச்சா சரீன், டெல்லி அரசு ஆஸ்பத்திரியின் மூத்த மருத்துவர், ஐதராபாத்தை சேர்ந்த டாக்டர் லட்சுமி லாவண்யா அலபட்டி ஆகியோர் தனித்தனியாக அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை. சிலர் தடுப்பூசி போட்டவுடன் தங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி வந்து விட்டதாக நினைத்துக்கொண்டு, முக கவசம் அணியாமலும், சரியாக அணியாமலும் சுற்றுகிறார்கள்.

ஆனால், 2 தவணை தடுப்பூசி போட்ட பிறகுதான், ஆன்டி பாடி செயல்பட தொடங்கும். நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். கொரோனா வைரஸ், முதலில் சுவாசப்பாதையை தாக்குகிறது. பிறகு, நெஞ்சு பகுதியை தாக்குகிறது. எனவே, மூக்கையும், வாயையும் திறந்து வைத்திருந்தால், தடுப்பூசி போட்ட பிறகும் கொரோனா தாக்க வாய்ப்பு உள்ளது.

கொரோனா தடுப்பூசிகள், கொரோனா வராமல் தடுக்கக்கூடிய பாதுகாப்பு கவசமாக இருக்காது.

ஆனால், தடுப்பூசி போட்டிருந்தால், கொரோனா தாக்கினாலும் அதன் தீவிரத்தன்மை குறைவாக இருக்கும். மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் குறைவாக இருக்கும். ஆஸ்பத்திாியில் அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள், 85 சதவீதம் குறைவாக இருக்கும். லேசான அறிகுறிகள்தான் காணப்படும்.

கொரோனா நமது உடலுக்குள் நுழைவதை முக கவசம்தான் தடுக்கும். தடுப்பூசி தடுக்காது. முக கவசம்தான் இப்போது நமக்கு சிறந்த தடுப்பு மருந்தாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story