டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு கூடுதல் படுக்கை வசதிகள் தேவை - மத்திய அரசிடம் முதல்வர் கெஜ்ரிவால் வலியுறுத்தல்


டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு கூடுதல் படுக்கை வசதிகள் தேவை - மத்திய அரசிடம் முதல்வர் கெஜ்ரிவால் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 April 2021 12:23 PM GMT (Updated: 17 April 2021 12:23 PM GMT)

டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்காக கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்த்தனிடம் வலியுறுத்தியதாக முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துக்கு பற்றாக்குறை உள்ளது என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் அங்கு, இதுவரை இல்லாத அளவிற்கு 19,486 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 141 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

இந்நிலையில் இன்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த நவம்பரில் 4,100 படுக்கைகளை வழங்கிய மத்திய அரசு தற்போது 1,800 படுக்கைகள் மட்டுமே வழங்கியுள்ளது என்றும் டெல்லியில் படுக்கை வசதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.

அடுத்த 2 அல்லது 3 நாட்களில் கூடுதலாக 6 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தனிடம் தொடர்பு கொண்டு பேசியதாகவும் முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

Next Story