நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா 2-வது அலைக்கு மத்திய அரசு, தேர்தல் ஆணையமே காரணம்; சிவசேனா குற்றச்சாட்டு


நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா 2-வது அலைக்கு மத்திய அரசு, தேர்தல் ஆணையமே காரணம்; சிவசேனா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 17 April 2021 4:24 PM GMT (Updated: 17 April 2021 4:24 PM GMT)

நாட்டில் வேகமாக பரவி வரும் 2-வது கொரோனா அலைக்கு மத்திய அரசு, தேர்தல் ஆணையமே காரணம் என சிவசேனா குற்றம் சாட்டி உள்ளது.

மத்திய அரசே காரணம்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2-வது அலை வீசி வருகிறது. குறிப்பாக மராட்டிய மாநிலத்தை 2-வது கொரோனா அலை புரட்டிப்போட்டு உள்ளது. இந்தநிலையில் கொரோனா வைரஸ் 2-வது அலைக்கு மத்திய அரசு, தேர்தல் ஆணையமே காரணம் என சிவசேனா குற்றம் சாட்டி உள்ளது.

இதுகுறித்து அந்த கட்சி சாம்னா பத்திரிகையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் நோய் தொற்று பரவ சீனா காரணமாக இருக்கலாம். ஆனால் 2-வது கொரோனா அலைக்கு தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் தான் பொறுப்பு. சமீபத்தில் தேர்தல் நடந்த மற்றும் நடக்க இருக்கும் மாநிலங்களில் மற்ற பகுதிகளை விட 500 மடங்கு வேகமாக நோய் தொற்று பரவுகிறது. அரசியல் ஆதாயம் மற்றும் தேர்தல் நடத்த வேண்டும் என்பதற்காக டெல்லி ஆட்சியாளர்கள் தொற்று அலையை உருவாக்கி உள்ளனர். நாட்டில் தற்போது ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து, ஆஸ்பத்திரியில் படுக்கைகள், வென்டிலேட்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தகன மையங்கள் நிரம்பி வழிகின்றன. ஆனால் மத்திய அரசு மேற்கு வங்காளத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறது.

போராடி இருந்தால்...

மத்திய அரசு அரசியல் செய்வதை குறைத்துவிட்டு, கொரோனாவுக்கு எதிராக போராடி இருந்தால் தற்போது நிலைமை கட்டுக்குள் வந்து இருக்கும். கொரோனா தொற்றுடன் பா.ஜனதா தொண்டர்கள் மேற்கு வங்காளத்தில் இருந்து தங்கள் வீடுகள் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு திரும்பி உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் பொதுக்கூட்டங்களும், கும்பமேளா போன்ற சமய நிகழ்ச்சிகளும் நிறுத்தப்படுவதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை. லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பமேளாவுக்காக ஹரித்துவாரில் திரண்டனர். இதனால் வைரஸ் பரவியது.

சாதுக்களை எப்படி குறை சொல்ல முடியும்?

மேற்கு வங்காளத்தில் தேர்தல் பொதுக்கூட்டத்தை நிறுத்த பிரதமர் மோடிக்கு விருப்பம் இல்லாத போது நாம் ஹரித்துவாரில் உள்ள சாதுக்களை எப்படி குறை சொல்ல முடியும்?.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து கொரோனா தடுப்பு மருந்தை வாங்குமாறு கூறிய போது, அவர் வெளிநாட்டு நிறுவனங்களுக்காக பேசுவதாக கூறினர். தற்போது நிலைமை எல்லைமீறி போன பிறகு, ரஷியாவின் தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. மத்திய அரசு அகங்காரம், அரசியல் லாபத்தை ஓரமாக வைத்து அனைவரிடமும் வெளிப்படையாக பேச வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story