கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் மக்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும்; கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வலியுறுத்தல்


கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் மக்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும்; கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 April 2021 5:12 PM GMT (Updated: 17 April 2021 5:12 PM GMT)

கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் மக்களுக்கு தனியார் மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வலியுறுத்தி உள்ளார்.

பெங்களூருவில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது:-

பாடம் கற்றுக் கொள்ளவில்லை

பா.ஜனதாவினருக்கு ஆட்சி நிர்வாகம் நடத்துவதை விட இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதே முக்கியமாகி விட்டது. கர்நாடகத்திலும், நாட்டிலும் பா.ஜனதா ஆட்சியின் நிர்வாக திறமை இன்மை காரணமாக தான், கொரோனா 2-வது அலை உருவாகி இருக்கிறது. கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் மக்கள் சரியான சிகிச்சை கிடைக்காமல் பரிதவிக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது.

கடந்த ஆண்டு (2020) கொரோனா காரணமாக மக்கள் அனுபவித்த துன்பங்களில் இருந்து மத்திய, மாநில பா.ஜனதா அரசுகள் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. மக்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்து, மாத்திரைகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பற்றாக்குறையை சரி செய்ய மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இலவச சிகிச்சை

கொரோனா பாதிப்பு மற்றும் உயிர் இழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கான படுக்கைகள் கிடைப்பதில்லை. பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட படுக்கைகள் நிரம்பி விட்டன. தனியார் மருத்துவமனைகளை நோக்கி நோயாளிகள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் இல்லாத காரணத்தால், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். கொரோனா 2-வது அலை உருவான சந்தர்ப்பத்தில் மக்களின் ஆரோக்கியத்தில் அரசு கவனம் செலுத்தாமல் இடைத்தேர்தலில் கவனம் செலுத்தியதே, மாநிலத்தில் இந்த நிலை ஏற்பட காரணமாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story