ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.6 ஆயிரம் வழங்குங்கள் 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் - சோனியா காந்தி வலியுறுத்தல்


ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.6 ஆயிரம் வழங்குங்கள் 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் - சோனியா காந்தி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 18 April 2021 12:33 AM GMT (Updated: 18 April 2021 12:33 AM GMT)

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான வயது வரம்பை 25 ஆக குறைக்க வேண்டும். கொரோனா கால நிவாரணமாக தலா ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் மத்திய அரசை சோனியா காந்தி வலியுறுத்தினார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலா ளர்கள், நிரந்தர அழைப்பாளர் கள், மாநில பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது:-

கொரோனாவை எதிர்த்து போரிடுவதை தேசிய சவாலாக காங்கிரஸ் கருதுகிறது. இதை கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு எதிர்கொள்ள வேண்டும். அரசியல் எதிரியாக அல்லாமல், இந்தியர்களாக எதிர்கொள்வதுதான் ராஜதர்மம்.

அதனால்தான், கடந்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதவாக்கிலேயே மத்திய அரசுக்கு எங்கள் ஒத்துழைப்பை அளிக்கத் தொடங்கினோம்.

முழு வீரியத்துடன் இரண்டாவது அலை இந்தியாவை தாக்கி இருப்பதை நாம் அலட்சியப்படுத்த முடியாது. நன்கு தயாராக ஓராண்டு அவகாசம் இருந்தபோதிலும் மத்திய அரசு தயாராகவே இல்லை.

எதிர்க்கட்சி தலைவர்கள் ஆக்கபூர்வமான யோசனைகள் சொன்னாலும், அதை காது கொடுத்து கேட்பதற்கு பதிலாக, அவர்களை தாக்குவதற்கு மத்திய மந்திரிகள் களம் இறக்கப்பட்டார்கள். இந்த ‘நீயா? நானா?’ விவாதம் குழந்தைத்தனமானது. முற்றிலும் தேவையற்றது.

கொரோனாவை பொறுத்தவரை அனைத்து வயதினரையும் தாக்குகிறது. எனவே, கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான வயதுவரம்பை 45-ல் இருந்து 25 ஆக குறைக்க வேண்டும். 25 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும்.

குறிப்பாக, ஆஸ்துமா, இதயநோய், நீரிழிவு, சிறுநீரக நோய்கள், கல்லீரல் நோய்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

கொரோனா பிரச்சினையில் சில மாநிலங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது. ஆனால், காங்கிரஸ் மற்றும் இதர எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் கோரிக்கைகளுக்கு மவுனம் சாதிக்கிறது.

காங்கிரஸ் முதல்-மந்திரிகளுடன் நான் ஆலோசனை நடத்தியபோது, கொரோனா சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள், ரெம்டெசிவிர் மருந்துகள், ஆக்சிஜன் ஆகியவற்றுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த பொருட்களுக்கு 12 சதவீத ஜி.எஸ்.டி. விதிப்பது பெரும் கவலைக்குரியது.

தற்போது, கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பகுதிநேர ஊரடங்கு, பயண கட்டுப்பாடுகள், பொது முடக்கம் போன்றவற்றை அறிவித்து வருகின்றன. இதனால், பொருளாதார நடவடிக்கைகள் முடங்கி மீண்டும் ஏழைகளும், தினக்கூலி தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்கள்.

ஆகவே, அவர்களுக்கு மாத வருவாய் அளிப்பது அவசியம். தகுதிவாய்ந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் வங்கிக்கணக்கில் ரூ.6 ஆயிரம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.

Next Story