கடந்த ஆண்டைபோல ஒன்றுபட்டு கொரோனாவை ஒழிப்போம் - பிரதமர் மோடி


கடந்த ஆண்டைபோல ஒன்றுபட்டு கொரோனாவை ஒழிப்போம் - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 18 April 2021 2:16 AM GMT (Updated: 18 April 2021 2:16 AM GMT)

கடந்த ஆண்டைபோல ஒன்றுபட்டு கொரோனாவை ஒழிப்போம் என்று நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் பிரதமர் மோடி தெரிவித்தார்.

புதுடெல்லி, 

நாட்டில் கொரோனா பரவலின் 2-வது அலை காரணமாக தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 2.34 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் 1.45 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் 1,341 கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா பரவல் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனைக் கூட்டத்தை நேற்று கூட்டினார். இரவு 8 மணிக்கு தொடங்கிய இந்தக் கூட்டம், சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்தது. இந்த கூட்டத்தில் பல துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருந்துகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துவது, தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிக்கும் பணிகளை விரைவு படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க படுக்கை வசதிகளை அதிகப்படுத்தவும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார். மேலும், ஆக்சிஜன் உற்பத்தியை அதிகப்படுத்தவும் அதன் விநியோகத்தை முறையாக மேற்கொள்ளவும் பிரதமர் அறிவுரை வழங்கினார். 

கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தியை மே மாதத்தில் சுமார் 74 லட்சம் குப்பிகள் என அதிகரிப்பது என முடிவெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி உற்பத்தியின் திறனை அதிகரிக்க தேவையான வளங்களை கருத்தில் கொண்டு முழு தேசிய திறனையும் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டார் என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் பி.எம்.கேர்ஸ் (PM CARES) நிவாரண நிதியிலிருந்து 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆக்சிஜன் தயாரிப்பு ஆலைகள் நிறுவப்படும் என உறுதி அளிக்கப்பட்டதாக, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

கூட்டத்துக்குப் பின் பிரதமர் மோடி தனது டுவிட்டரில், “தற்போதைய கொரோனா நிலைமையைக் கையாள ஆயத்தத்தை மதிப்பாய்வு செய்தது. மருந்துகள், ஆக்ஸிஜன், வென்டிலேட்டர்கள் மற்றும் தடுப்பூசி தொடர்பான அம்சங்கள் விவாதிக்கப்பட்டன. கடந்த ஆண்டு நாங்கள் செய்தது போலவே, கொரோனாவை இன்னும் அதிக வேகத்துடனும், ஒருங்கிணைப்புடனும் வெற்றிகரமாக எதிர்த்துப் போராடுவோம்” என்று பதிவிட்டிருந்தார். 






Next Story