இடைத்தேர்தல் முடிந்துவிட்டதால் முதல்-மந்திாி எடியூரப்பாவை மாற்றும் பணிகள் தொடங்கும்; கர்நாடக பா.ஜனதா கட்சி எம்.எல்.ஏ. பேட்டி


இடைத்தேர்தல் முடிந்துவிட்டதால் முதல்-மந்திாி எடியூரப்பாவை மாற்றும் பணிகள் தொடங்கும்; கர்நாடக பா.ஜனதா கட்சி எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 18 April 2021 1:56 PM GMT (Updated: 18 April 2021 1:56 PM GMT)

இடைத்தேர்தல் முடிந்துவிட்டதால் முதல்-மந்திரி எடியூரப்பாவை மாற்றும் பணிகள் தொடங்கும் என்று பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ. கூறினார்.

கர்நாடக பா.ஜனதா கட்சியை சேர்ந்த பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ. பாகல்கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

காதுகள் கேட்பது இல்லை

பஞ்சமசாலி சமூகத்தை இட ஒதுக்கீட்டு பட்டியலின் 2ஏ பிரிவில் சேர்க்க வேண்டும் என்பது குறித்து சட்டசபையில் பேச நான் முடிவு செய்தேன். இதற்கு எடியூரப்பா அனுமதி வழங்கவில்லை. இந்த பிரச்சினைக்கு பதில் அளித்தால் அது சிக்கலாகிவிடும் என்று முதல்-மந்திரி நினைத்தார். எடியூரப்பாவிடம் எடுத்துக் கூறினால், 2 மிஷின் வைத்தாலும் அவரது காதுகள் சரியாக கேட்பது இல்லை.

நான் 10 லட்சம் பேரை கூட்டி பெங்களூருவில் பெரிய மாநாடு நடத்தினேன். இதை பார்த்த பா.ஜனதா தலைவர்கள், என்னை கட்சியை விட்டு நீக்குவதை கைவிட்டுவிட்டனர். எனக்கு அடிக்கடி எச்சரிக்கை கொடுக்கிறார்கள். எத்தனை முறை தான் இவ்வாறு எச்சரிக்கை கொடுப்பார்களோ. என்னை பா.ஜனதாவை விட்டு நீக்க முடியாது ஏன்?. லிங்காயத் சமூகத்தில் பஞ்சமசாலி பிரிவினர் 1.10 கோடி பேர் உள்ளனர்.

நாடகமாடுகிறார்கள்

அரசியல்வாதிகள் பெரிய நாடக நிறுவனத்தை போன்றவர்கள். அரசியல்வாதிகள் எப்போதும் நாடகமாடுகிறார்கள். சிலர் பஞ்சமசாலி சமூகத்தை கொள்முதல் செய்ய முயற்சி செய்கிறார்கள். அது என்ன சர்க்கரை ஆலையா?. வெள்ள நிவாரண பணிகளுக்கு மத்திய அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என்று கூறினேன். மத்திய அரசு உடனே ரூ.1,500 கோடி ஒதுக்கியது.

கர்நாடகத்தில் இடைத்தேர்தல் முடிந்துவிட்டது. இனி முதல்-மந்திரி எடியூரப்பாவை மாற்றும் பணிகள் தொடங்கும். விளக்கம் கேட்டு எனக்கு பா.ஜனதா நோட்டீசு அனுப்பியுள்ளது. அதற்கு நான் பதிலளிக்க மாட்டேன்.

இவ்வாறு பசனகவுடா பட்டீல் கூறினார்.


Next Story